ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கோருகிறார் உதய கம்மன்பில
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கை மூலம் கிழக்கில் ‘நஸிரிஸ்தான்’ என்ற பெயரில் தனி முஸ்லிம் நாடொன்று விரைவில் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் முஸ்லிம் காங்கிரஸின் கரையோர மாவட்ட தனிநாடு கோரிக்கைக்கான பதிலை ஜனாதிபதி உடனடியாக வெளியிட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்றுக் காலை கொழும்பு அபேராம விகாரையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கென்று தனியான நிர்வாகம் கொண்ட கரையோர மாவட்ட மொன்றினை ஒதுக்கித்தருமாறு கோரியுள்ளார்.
இது முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களுக்கு தனிநாடு வழங்கப்போகிறாரா? இல்லையா? என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விடம் இந்த கரையோர மாவட்ட கோரிக்கை ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதற்காக இந்த கரையோர மாவட்ட கோரிக்கை பேரம் பேசப்பட்டது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்து விட்டார்.இதனையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் மீண்டும் அதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன சொல்கிறார்? கரையோர மாவட்டம் எனும் முஸ்லிம் தனிநாட்டை வழங்கப்போகிறாரா என்பது பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் என்று முஸ்லிம் நாடுகள் இருப்பது போல் இலங்கையில் நஸிரிஸ்தான் என்று முஸ்லிம் நாடு கிழக்கில் உருவாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் அவதானமாக இருக்கவேண்டும்.
வில்பத்துவில் நினைத்த படியெல்லாம் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இந்நாட்டில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு என்று தனியான சட்டங்கள் இல்லை.
இலங்கைக்கு பொதுவான சட்டமொன்றே அமுலிலுள்ளது. என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இலங்கைக்கு பொதுவான சட்டமொன்றே அமுலிலுள்ளது. என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
