Tuesday, 2 June 2015

மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கவும் இலங்கை வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் மோதிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
மீனவர் பிரச்சனையைத் தீர்க்க கச்சத்தீவை மீட்க வேண்டுமென ஜெயலலிதா தனது கடிதத்தில் கோரியிருக்கிறார்.
இது தொடர்பாக ஜெயலலிதா, நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் மீன் பிடிக்க இருந்த தடை முடிவடைந்து மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே, 14 தமிழக மீனவர்களும் அவர்களது 3 படகுகளுடன் கைதுசெய்யப்பட்டிருப்பதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக 18 படகுகள் இலங்கை வசம் இருப்பதாகவும் 2014 ஜூன் மாதத்திற்குப் பிறகுப் பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட 80 படகுகளில் 16 படகுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
படகுகளோடு மீனவர்களைக் கைதுசெய்யும் இலங்கை, மீனவர்களை மட்டும் விடுவிக்கிறது என்றும் இதனால், நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் படகுகள் முழுமையாக சேதமடைந்துவிடுவதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தற்போதைய கைதுநடவடிக்கையின் மூலம், தமிழக மீனவர்களை கச்சத்தீவை ஒட்டியுள்ளு அவர்களுடைய பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை அச்சுறுத்த முயல்வதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையிலான பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும்போதும், தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்வதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த, 1974, 76ஆம் வருட ஒப்பந்தங்கள் செல்லாது என்றும் அதனை மீட்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.
Loading...