Sunday, 28 June 2015

அடுப்பங்கரை இனவாதிகளும், அங்காடி அரசியல்வாதிகளும்

.
------------- முயிஸ் வாஹாப்தீன் -------------
அவசர அவசரமாக அமைச்சரவையின் அடுப்பங்கரை இனவாதிகளினால் கொண்டுவரப்பட்ட 20வது திருத்தம் பாராளுமன்றத்தில் வேகாத பருப்பாகி விட்டதால் கடுப்பாகி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. மாவட்ட மட்டத்திலான விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும் எனற சுலோகம் தாங்கிய பொதிக்குள் மறைக்கப்பட்டிருந்த ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகத்தினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிதுவத்துக்கான வாய்ப்புக்கு ஆப்பு வைக்கவென்றே உருவாகிய இந்த உத்தேச தேர்தல் முறையை அனுர குமார, சம்பந்தன், ஹகீம், ரிஷாத், அணியினர் ஆக்ரோஷமாக ஒருமித்து எதிர்த்ததன் மூலம் இலங்கையில் இனவாதம் இந்த வருடத்துக்குள் இன்னொரு முறை தோல்வியை அடைந்து விட்டது. ஆனால் முற்றுப் பெறவில்லை.
பாராட்டப்பட வேண்டியதும், கவலைப்பட வேண்டியதுமான இரண்டு விடயங்கள் இருக்கின்றன. இந்த பிரச்சினையை துணிச்சலோடும், தூர நோக்குடனும் கையாண்ட கௌரவ அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. வில்பத்து விவகாரம் அமைச்சர் ரிஷாத் அவர்களுக்கும், 20வது திருத்த சட்டம் சம்பந்தமான பிரச்சினை அமைச்சர் ஹகீம் அவர்களுக்கு மட்டும் உரியன எனச் சொல்லி எமக்கிருக்கும் சமூகக் கடமையை புறந்தள்ளி விட முடியாது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று இருநூறு நாட்கள் கூட ஆகாத நிலையில் இனவாதிகளின் வலையில் சிக்குண்டு சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளை செய்து வரும் இன்றைய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் கவலைக்குரிய விடயமாகும். எமது சமீப கால வரலாறு இனவாதிகளுக்கு புகட்டிய பாடம் எல்லோருக்குமானது.
புதிய பாராளுமறத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனியாக ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே காணப்படுகிறது. எமது சமூக பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற போது எமது சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் தகுதி படைத்தவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும். அரசியல் அங்காடி வியாபாரிகளுக்கும், கவர்ச்சிகர போஸ்டர் களுக்கும் வாக்களித்து கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் போதும். இனியும் நாம் எமது உண்மையான அரசியல் பிரதிநிதிகளை இனங்கான தவறி விடக் கூடாது. எமக்கு முன்னாலுள்ள பாரிய சவால்களை வெற்றி பெறக்கூடிய துணிச்சலும், தூர நோக்கும், நேர்மை, அறிவு படைத்த நல்லவர்களை மட்டுமே எமது பிரதி நிதிகளாக நாம் அனுப்ப வேண்டும். ஒரு தூய, தூர நோக்கம் கொண்ட புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய பயணத்தில் நாமும் இணைந்து கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.
Loading...