Sunday, 28 June 2015

உலக மசாலா: எலி ஹீரோக்கள்!


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொஸாம்பிக்கில் எலிகள் ஹீரோக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ராட்சச பை எலிகள் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன. மற்ற எலிகளை விட உருவத்தில் பெரியவை. மொஸாம்பிக் முழுவதும் ஏராளமான இடங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் அற்புதமான பணியைச் செய்து வருகின்றன. இந்த எலிகள். கடந்த 9 ஆண்டுகளில் 13 ஆயிரம் கண்ணிவெடிகள் எலிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல இரண்டரை லட்சம் ரத்த மாதிரிகளில் இருந்து காச நோயைக் கண்டுபிடித்தும் சொல்லியிருக்கின்றன. பார்ட் வீட்ஜென்ஸ் என்பவர் இருபதாண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு, எலிகள் மிகவும் நட்பாகப் பழகக்கூடியவை. பயிற்சியளித்தால் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவை என்று கண்டுபிடித்தார்.
அவரே எலிகளுக்குப் பயிற்சியளித்து, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கச் செய்தார். 200 சதுர மீட்டர் நிலத்தில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மனிதர்களும் நாய்களும் 5 நாட்களை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் எலி, 20 நிமிடங்களில் நுகர்ந்து கண்டுபிடித்துவிடுகிறது. இதுவரை கண்ணிவெடி கண்டுபிடிப்பின் மூலம் எந்த ஓர் எலியும் உயிரை இழக்கவோ, காயமடையவோ இல்லை.
வயதாகிவிட்ட எலிகளை காட்டில் விட்டுவிடுகிறார்கள். கண்ணிவெடி கண்டுபிடிப்பு ஹீரோக்களுக்கு ஆரோக்கியமான உணவு, பயிற்சி, அரவணைப்பு போன்றவை அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீரரும் எலிகளைத் தங்கள் தோழர்களாகவே மதிக்கிறார்கள்.
அடடா! மனிதர்களைக் காக்கும் ஹீரோக்களுக்கு ராயல் சல்யூட்!
Loading...