தோக்கியோ, ஜூன் 13- ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் உள்ள சுகிஷிமா வீதிகளில் செல்லும் மக்கள் அங்கு தினமும் வாக்கிங் செல்லும் ராட்சத ஆமையைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர். சிலர் கேரட், முட்டைகோஸ் என அதற்கு பிடித்தமான உணவையும் வாங்கி கொடுக்கின்றனர்.
உலகில் மிகவும் மெதுவாக நடக்கும் மனிதர் ஹிசோ மிதானி. ’போன்சான்’ என்ற தனது ஆப்பிரிக்க முள் ஆமையுடன் (3 மீட்டர் நீளமும் 70 கிலோ எடையும் கொண்டது) தினமும் சுகிஷிமா வீதியில் வாக்கிங்(ஊர்ந்து!!) செல்கிறார். 20 வருடத்திற்கு முன்பாக அவரது மனைவி பிராணிகளை விற்பனை செய்யும் கடையில் போன்சானை வாங்கினார்.
அன்று முதல் இன்று வரை தனது மனைவியைப் பார்த்துக் கொள்வதைப் போல், அந்த ஆமையையும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார் மிதானி. எங்கு சென்றாலும் தன் ஆமையுடனே செல்லும் அவர் ஒரு முறை சாவு வீட்டிற்கும் அப்படிச் செல்ல துக்கத்தையும் மறந்து பலர் போன்சானைப் பார்த்து சிரித்துவிட்டனர். இதனால் சிலர் மிதானியை விமர்சித்தாலும், பலர் அவரை ’ஆமை மனிதன்’ என்று கொண்டாடுகின்றனர்.
