
அந்திப்பூச்சியின் மந்திரம்
பலிக்கத் தொடங்குகையில்
கோடை நடனம் செக்கச் செவேலென
கரைந்துருகுகின்றது
உருவம்
பொன்னொளி உருக்கென வியாபிக்க
வெள்ளை ஆடை அகன்று குடைவிரிய
உயிர் எனும் வெள்ளிப்பூச்சி
ஜோதியை மொய்க்கிறது
உருக்கொண்டு முற்றி வெடிக்கின்ற
நிறச் சுளைகளின் மீது
கால்களால் ருசியறியும் நடனம் சுழல்கிறது
ஆவி கவ்விடும் பார்வையில்
நிசப்தவெளி விரிய
மஞ்சள் புல்வெளியாளின்
சிறகுகள் படபடக்கின்றன
களிநடனமிடும்
மேகங்களின் நறுமணம் சொட்டுகின்ற
தெய்வீகப் பனிமுத்துக்கள் உறிஞ்சி
மஞ்சள் சிறகன் உணர்வின் ஆழத்திற்கு
நித்தியத்தின் கிருபையை கொண்டு செல்கிறான்