ஃபிஃபாவில் ஏற்பட்ட ஊழல் புகார் காரணமாக 5வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோசப் பிளேட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அடுத்த தலைவர் பதவியில் அமரும் வரை அவர் தற்போது பதவியில் தொடருகிறார். வருகிற ஜுலை 20ஆம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. எப்படியும் வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளி வரும் 'சுவிஸ் ஐயம் சான்டாக்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், '' ஜோசப் பிளேட்டருக்கு ஆசிய மற்றும் ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்புகளில் முழு ஆதரவு உள்ளது. இந்த கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஜோசப் பிளேட்டர் பதவியில் இருந்து விலகுவதை விரும்பவில்லை. கால்பந்து விளையாட்டை 'குளோபல் ஸ்போர்ட்டாக' மாற்றியதில் ஜோசப் பிளேட்டரின் பங்கு அளப்பறியது. அவருக்கு இணையான தலைவர் கிடைப்பது கடினம் என்று இந்த இரண்டு கூட்டமைப்புகள் கருதுகின்றன. இதனால் ஜோசப் பிளேட்டர் ராஜினாமா செய்ய கூடாது என்று அந்த கூட்டமைப்புகள் தடுத்து வருகின்றன. இதன் காரணமாக ஜோசப் பிளேட்டர் தனது ராஜினாமா முடிவு குறித்து மறுபரீசிலனை செய்து வருதாக'' கூறியுள்ளது.
அதோடு மறுதேர்தல் நடைபெற்று புதிய தலைவர் பொறுப்பேற்ற பிறகே எதையும் நம்ப முடியும் என்றும் அந்த பத்திரிகை தனது செய்தியில் கூறியுள்ளது.
