Thursday, 25 June 2015

தேர்தல் முறையில் கொண்டுவரப்படும் மாற்றம் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும்

 – பாராளுமன்றில்    சந்திரகுமார் எம்பி
சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்கும் சட்டமூலங்கள்  நிறைவேற்றIMG_0629ப்படுமானால் அது கடந்த காலங்களைப்போன்று பாரிய அழிவுகள் தொடரப்போகின்றதென்றே அர்த்தமாகிவிடும். அத்தோடு மக்கள் தாம் விரும்பும் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்கு இப்போது நடைமுறையிலிருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையே ஒரு நல்ல தேர்தல் முறையாகக் கொள்ளப்படுகின்றது. எனவே தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமானால் அது யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும். என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைலருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்  நேற்று(23) செவ்வாய்க்கிழமை பாராளுமன்னறில் நடைபெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார் அவரது உரையின் முழு வடிவம் வருமாறு.
கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே அரசியலமைப்பின் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக நடைபெறுகின்ற சபை ஒத்திவைப்பு வேளையின்போதான விவாதத்திலே கலந்துகொண்டு எனது கருத்துக்களைத் தெரிவிப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.  இன்று நாடு முழுவதும் இந்த 20வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் இதன் மூலம் தேர்தல் முறையில் எப்படியான மாற்றத்தை இந்த நாடு உருவாக்கப்போகின்றது என்பது தொடர்பாகவும் பரவலாக இந்த நாட்டு மக்களிடையேயும் ஊடகங்களிலேயும் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையிலே நாங்கள் இந்த விடயம் தொடர்பாகப் பாராளுமன்றத்திலே ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவந்து பேசிக்கொண்டிருக்கின்றோம்.  உண்மையிலே இந்தத் தேர்தல் முறை மாற்றம் என்பது சிறுபான்மைக் கட்சிகளினதும் சிறிய கட்சிகளினதும் நலன்களைப் பாதுகாக்கப்போகின்றதா? அல்லது அவற்றின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்படப்போகின்றதா? போன்ற சந்தேகங்கள் இந்த நாட்டிலே உள்ள எல்லோரிடமும் இருக்கின்றது.
மேலும் இந்த நாட்டிலிருக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலென்ன?  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன?  அவை இரண்டுமே அடிக்கடி சிறுபான்மையைினரின் நலன்களைப் பாதிக்காதவகையில்தான் தேர்தல் திருத்தத்தைக் கொண்டுவருவோம் என்று அறிக்கைகளுக்கூடாகவும் ஊடகங்களிலும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.  நடைமுறையில் கடந்த ஐந்து மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  ஆனால்  ஒருமித்த ஒத்த எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை என்பது தான் உண்மையாகும்.  இங்கே சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் பல தடவைகள் ஒன்றுகூடி இந்த இரண்டு பிரதான கட்சிகளிடமும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் நலன்கள் பாதிக்கப்படாது தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டுமென்பதை வலியுறுத்தியிருக்கின்றார்கள்.  அப்படிச் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் நலன்கள் பாதிக்கப்படும் முடிவுகள் இந்த 20வது திருத்தச்சட்டத்தில் கொண்டுவரப்படுமாயின் ஒட்டுமொத்தமாக எல்லோரும் இணைந்து இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என்ற நிலைப்பாட்டைக்கூடச் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் எடுத்திருக்கின்றார்கள். ஆகவே இந்த நாட்டிலே இருக்கக் கூடிய இந்தத் தரப்புக்களின் நியாயங்களை ஏற்றுக்கொள்ளாமல் இந்தச் சட்டமூலம் இந்தப் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்படுவது சாத்தியமில்லை.  ஆகவே இந்த விடயத்தில் பெரும்பான்மைக் கட்சிகள் இறங்கிவந்து சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் கருத்துக்களைக் கவனத்திலெடுத்து அவர்களது நலன்களின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதை நான் இச்சந்தர்ப்பத்திலே வலியுறுத்துகின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் தற்போது நடைமுறையிலிருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைதான் இந்த நாட்டின் எல்லா இன மக்களுக்கும் ஒரு சிறந்த தேர்தல் முறையாக இருக்கின்றது எனச் சொல்ல முடியும்.   ஏனென்று சொன்னால் இந்தத் தேர்தல் முறைக்கூடாகத்தான் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.   அது மட்டுமல்லாது மக்கள் ஜனநாயக ரீதியாகத் தாம் விரும்பும் கட்சியையும் தாம் விரும்பும் வேட்பாளரைத் தமது பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யக்கூடிய ஒரு அதிகரித்த ஜனநாயகத் தன்மை இந்தத் தேர்தல் முறையில் தான் இருக்கின்றது.
தொகுதி ரீதியான தேர்தல் முறையிலே அந்தத் தொகுதிக்குள் சில நேரங்களில் ஒரு கட்சியை ஆதரிப்பவர்கள் தமக்கு விருப்பமில்லாத ஒரு பிரதிநிதியைத் தெரிவுசெய்யவேண்டிய ஒரு அழுத்தமான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.  அல்லது ஒரு தொகுதி என்ற வரையறைக்குள் பெரும்பான்மையான வாக்குப் பலத்தைப் பெறும் ஒருவருக்கெதிராக இரண்டாவது மூன்றாவது வேட்பாளர்கள் பெறும் வாக்குக்கள் அதிகரித்திருக்கும்.  இது உண்மையான ஒரு ஜனநாயக நடைமுறையாகக் கொள்ள முடியாது.  அத்துடன் மக்கள் தாம் விரும்பும் தமது நலன்களுக்காக உழைக்கக் கூடிய தகுதிவாய்ந்த பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்கு இப்போது நடைமுறையிலிருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறைதான் ஒரு நல்ல தேர்தல் முறையாகக் கொள்ளப்படுகின்றது.
இப்போது நாங்கள் புதியதொரு தேர்தல் முறைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.  தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் விருப்பு வாக்குகளைப் பெறுவதில் கட்சிகளுக்குள் ஏற்படும் உள் முரண்பாடுகளே புதிய தேர்தல் முறை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணம் என்று சொல்லப்படுகின்றது. இது அந்தந்தக் கட்சிகளின் ஒழுக்கம் தொடர்பான விடயம். சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மக்களின் பணத்தைச் சூறையாடுவோர் இத்தேர்தல் முறையைப் பயன்படுத்தி தாங்களும் ஒரு மக்கள் பிரதிநிதியாக வருவதற்கு - அரசியல் பலம் பெறுவதற்கு இத்தேர்தல் முறை வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று இங்கு சொல்லப்பட்டது. இப்படியான தவறான சக்திகள் அரசியல் அதிகாரத்துக்குள் வருவதைக் கட்டுப்படுத்தும் தலைமைப் பண்பை சம்பந்தப்பட்ட கட்சிகள் கொண்டிருக்கவேண்டும். ஏன் அந்தக் கட்சிகள் அப்படியானவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்கின்றன? ஒரு வாக்காளர் தான் விரும்பும் அல்லது தன் சமூகத்துக்கு அல்லது தனது மக்களுக்கு அல்லது தனது கிராமத்துக்கு உழைக்கக்கூடிய ஒருவருக்கு விருப்பு வாக்களித்து அவரை மக்கள் பிரதிநிதியாகத் தெரிவுசெய்வதை நான் ஓர் உயர்ந்த ஜனநாயகப் பண்பாகக் கருதுகின்றேன். இந்த மக்களின் விருப்பத்துக்கு எதிரான பல்வேறு விடயங்கள் இப்புதிய தேர்தல் முறையில்  உள்ளடங்கியிருக்கின்றன என்று நான் கருதுகின்றேன். எனவே இது தொடர்பில் கருத்தில் கொள்ளப்படல்வேண்டும்.

இன்று வடக்குக் கிழக்கிலே தமிழ் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்கள் இருக்கின்றன. அங்கு தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநித்துவம் பாதுகாக்கப்படவேண்டும். அதையொட்டிய ஒரு தேர்தல் முறையைத்தான் வடக்குக் கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். வடக்குக் கிழக்குக்கு வெளியே பரவலாக  - செறிவுத் தன்மையற்ற முறையில்  வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் தங்களுடைய பிரதிநிதித்துவத்தின் உறுதிப்பாடு தொடர்பில் சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் எந்த வகையிலும்  பாதிக்கப்படாத வகையில் - அவர்களது இன விகிதாசார அடிப்படையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். இதுதான் இன்றுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இங்கு எனக்கு முன்பு பேசிய கெளரவ சம்பந்தன் ஐயா அவர்கள் குறிப்பிட்ட விடயத்தை நானும் வலியுறுத்த விரும்புகின்றேன். பாராளுமன்றத்துக்கு 11 மக்கள் பிரதிநிதிகளைத்  தெரிவு செய்யக்கூடிய நிலையில் இருந்த யாழ். தேர்தல் மாவட்டம் 2010ஆம் ஆண்டு 09 பிரதிநிதிகளாகக் குறுகி தற்போது அங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 07 பிரதிநிதிகளாகக்  குறையாலாமென  அதாவது எதிர்காலத்தில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் 07 பிரதிநிதிகளைத்தான்  தெரிவுசெய்யலாம் என்ற நிலைப்பாட்டை தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருக்கின்றார். இது உண்மையிலேயே யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும். அங்கு மக்களின் செறிவு குறைவு என்பது அந்த மக்கள் செய்த குற்றமல்ல இந்த நாட்டிலே நீண்டகாலமாக - 30 வருட காலமாக ஏற்பட்ட மோசமான யுத்தம் இந்த மக்களை தங்களது சொந்த மண்ணைவிட்டு இடம்பெயரவும் புலம்பெயரவும் வைத்திருக்கின்றது. ஆகவே எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகின்ற அரசியல் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில்  தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கூடாக அபிவிருத்தி செய்யப்படக்கூடிய சூழ்நிலையானது இந்த மக்களை மீண்டும் தங்களுடைய சொந்த மண்ணுக்கு வரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். ஆகவே இந்த யுத்தம் ஏற்படுத்திய தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் காப்பாற்றப்படவேண்டும். இதை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கிறோம். அண்மையிலே இந்த பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடந்த கூட்டத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதிஇ இந்த நாட்டின் கெளரவ பிரதமர் கட்சித் தலைவா்கள் தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் இந்த கருத்து வலுவாக எங்களால் வலியுறுத்தப்பட்டது. இந்த நியாயம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் நடைமுறையில் எந்த உத்தரவாதமும் இதுவரையும் தரப்படவில்லை. சட்டரீதியான உத்தரவாதம் அவசியமானது. அந்த வகையில் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்பட்டால் இந்த விடயம் முக்கியமாக கருத்திலெடுக்கப்பட வேண்டுமென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.

அடுத்ததாக முக்கியமான விடயமொன்றை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். உண்மையிலே இந்த இருபதாவது அரசியலமைப்பு மாற்றத்திற்கூடாக தேர்தல் முறையில் திருத்தம்  வரப்போகின்றதா? என்பது தொடர்பான நம்பிக்கை ஒருவரிடமும் இல்லை. எந்த கட்சியிடமும் இல்லை. ஆளுங்கட்சியினரிடமும் இல்லை; எதிர்க்கட்சியினரிடமும் இல்லை. அந்த நம்பிக்கை எந்த பாராளுமன்ற உறுப்பினரிடமும்கூட இல்லை. ஏதோ தேவையில்லாமல் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது; சர்ச்சையாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றுதான் நான் கருதுகின்றேன். தனிப்பட்ட ரீதியில் பேசும்போது இது அவசியம இல்லையென்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். என்றாலும் இதைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். தேர்தல் திணைக்கள மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக மிகவும் கரிசனை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே தேர்தல் முறையில் திருத்தம்  வரப்போகின்றதா? அப்படியாயின் எதிர்காலத்தில் வருகின்ற அடுத்த பொதுத் தேர்தல் புதிய தேர்தல் முறைமையின் கீழ்தான் அமையப்போகின்றதா? புதிய தேர்தல் முறைமையின்கீழ் தேர்தல் நடப்பதாயின் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படுமா? அது ஓரிரு நாட்களில் முடிக்கக்கூடிய விடயமா? இது தொடர்பான மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இந்த பாராளுமன்றத்துக்கும் இந்த அரசாங்கத்துக்கும் இருக்கின்றது. ஆனால் இது தொடர்பாக எந்த நம்பிக்கையும் ஒருவரிடமும் இல்லை.
தேர்தல் முறைமையில் திருத்தம் வரப்போகின்றதென்றும் அது தொடர்பாக அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றதென்றும் எல்லோரும் பேசிக்கொள்கின்றார்கள். இந்த விடயத்தில் எல்லோரும் ஒத்த கருத்துடன் நேர்மையாக நடந்துகொள்ளக்கூடிய சூழல் தென்படவில்லையென்றுதான் நான் தனிப்பட்ட முறையில் கருதுகின்றேன். அந்த எண்ணம் ஒருவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் மக்களை ஏமாற்றக் கூடாது. ஏனென்றால் இந்த இருபதாவது திருத்தச் சட்டமூல விடயத்தில் மக்கள் இந்த பாராளுமன்றத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பாத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே இது விடயத்தில் ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகின்றேன். அப்படி எடுக்கப்படும் நிலைப்பாடு எந்த சமூகத்துக்கும் எந்த இனத்துக்கும் அநீதி இழைக்காக வகையில் இருக்கவேண்டுமென்பது முக்கியமானது. இனிமேலும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் வளா்க்கும் எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்வது ஆராரோக்கியமானதல்லவென்று நீதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். நீதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட அந்த விடயத்தை நானும் ஞாபகப்படுத்துகின்றேன். இனிமேலும் சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்கும் சட்டமூலங்கள் இந்த நாட்டிலே நிறைவேற்றப்படுமானால் அது கடந்த காலங்களில் இந்த நாடு எதிர்கொண்ட பாரிய அழிவுகளை நாங்கள் தொடரப்போகின்றோமென்ற அர்த்தமாகிவிடும். ஏனெனில் நாங்கள் அனுபவப்பட்டிருக்கின்றோம். அந்த வகையில் இந்த நாடு எதிர்கொண்ட மோசமான நெருக்கடிகளை மீண்டும் ஏற்படுத்தும் வகையில் எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படக்கூடாதென்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன். முக்கியமாக நான் ஏற்கெனவே குறிப்பிட்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் கடந்த காலங்களைப் போலவே தொடர்ந்தும் தங்கள் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கக்கூடிய - பாதுகாக்கக்கூடிய  செயற்பாடொன்று இந்த அவையிலே வகுக்கப்படவேண்டுமென்று வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
Loading...