- மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
இம்மாத நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படுமென எ
திர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்துவரும் பொது தேர்தலையொட்டி
மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்றாக அறுபத்தைந்து
வருடகால முதிர்ச்சியும் இலங்கையை குடியரசாக்கிய பெருமையும் கொண்ட ஸ்ரீலங்கா
சுதந்திரகட்சி இத்தேர்தலில் பிளவுப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து
செல்கின்றன.அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்குமிடத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன்
பாரிய அளவிலான கட்சித்தாவல்களும் இடம்பெறுவது திண்ணம். கடந்த ஜனாதிபதி
தேர்தலின்போது இறுதிநேரத்தில் இடம்பெற்ற இன்றைய ஜனாதிபதியின் வெளியேற்றமே தேர்தலின்
போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக தொழிற்பட்டது நினைவிருக்கலாம. இதுபோன்ற
இறுதி நேர கட்சிதாவல்களையும் குழிபறிப்புகளையும் நன்கே எதிர்பார்க்கலாம்.
இன்றைய அரசியல் நிலவரங்களின்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதி
அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கான அறிகுறிகளைவிட அவர் தனது மீள்வருகையை உறுதியுடனே
திட்டமிட்டு முன்னகர்த்தி வருவதாகவே உணரமுடிகின்றது. இன்று ஜனாதிபதியாலும்
பிரதமராலும் முன்வைக்கப்படும் தேசிய அரசாங்கத்தை எதிர்ப்பதே தங்கள் நோக்கம் என
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைவரான சுசில் பிரேமஜயந்த உறுதிபட தெரிவித்துள்ளார்.
அதாவது மகிந்தவின் செயல்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஒருபோதும்
தடையாக இல்லை என்பதே அவர் மறைமுகமாக கருத்தாகும்.
அதேபோன்று மகிந்தவின் நாளந்த செயல்பாடுகளும் திட்டமிடல்களும் பெளத்த
விகாரைகளையும் அதுசார்ந்த நிகழ்வுகளையும் அடிப்படையாக கொண்டு நன்கே
திட்டமிடப்படுவதை உணரமுடிகின்றது. இலங்கையை பொறுத்தவரை பெளத்த விகாரைகளும்
துறவிகளும் அரச தலைவர்களை உருவாக்குவதில் மட்டுமல்ல அவர்களை அழிப்பதிலும்
கடந்தகாலங்களில் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கின்றார்கள் என்பதை சாதாரணமாக
யாரும் ஒதுக்கி விட முடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அடுத்து முன்னாள்
வெளியிட்ட கருத்து மிகவும் முக்கியமானதொன்றகும். அதாவது "நான் தோற்கவில்லை
வடக்கு கிழக்குமற்றும் மலையகத்தில் மட்டுமே நான் தோற்றேன்" என அவர் தெரிவித்த
கருத்துக்களின் தொடர்ச்சியே அவரது இன்றைய செயல்பாடுகளாகும். தன்னை ஒரு
தேசியவாதியாகவும் ஐரோப்பியருக்கு எதிராகவும் என்றும் காட்டிவரும் மகிந்தவுக்கு
தேசியம் என்பது நல்ல ஒரு காப்பரணாக விளங்குகின்றது.
அதேவேளை ஐரோப்பியருக்கும் அமெரிக்காவுக்கும் பிட்டிசன் அடிக்கும்
நமது தமிழ் தலைவர்கள் இருக்கும் வரை மகிந்த தன்னை வீரனாக காட்டிகொள்ளும் தேசியம்
என்றும் சிங்கள தேசியமாகவே பரிணமிக்கும் வாய்ப்புகளை அகலப்படுத்தும் என்பதும்
திண்ணம். அந்த வகையில்தான் கடந்த மே-18ம் திகதியையும் நமது தலைவர்களும் தமிழ் மக்களின்
பெயரில் பிரபாகரனுக்கு பிதிர் கழிக்கும் கடமையை செய்ததனூடாக பிரிவினையையும் இலங்கை
தேசியத்துக்கு எதிரான தன்மையையும் வெளிக்காட்டியிருந்தனர். இதுவெல்லாம் இலங்கை
தேசியம் என்பது சிங்களமக்களால் மட்டுமே கட்டி காக்கப்படவேண்டியது என்றும் அதற்கு
சிறுபான்மை இனங்கள் என்றுமே எதிரானவர்கள் என்றும் கூறிவரும் சிங்கள பெளத்த
சிந்தனையாளர்களுக்கு வாய்ப்பானதாகும். இந்த நிகழ்வுகள் எல்லாம் மகிந்தவுக்கு
வாக்குகளாக திசைதிரும்பபோகின்றது என்பது முக்கியமானதொன்றகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உருவாக்கத்தின் போதும் இதுபோன்ற
பலவகைகளிலும் பௌத்தம் குறித்தும் சிங்கள மொழி குறித்தும் தீவிரமாக செயற்பட்டுவந்த தேசிய
மரபுசார்ந்த பலதரப்பட்டோரின் ஒன்றிணைப்பில் உருவான அரசியல் எழிச்சியை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும். 1950களில் “லங்கா சிங்கள மகாசபை ” எனும்
மதவாதிகளின் அமைப்பு களத்தில் இறங்கியது. சிங்கள ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், ஆயுள்வேதவைத்தியர்கள், பௌத்த
பிக்குகள் போன்ற பலதரப்பட்ட சமூகப் பிரிவனரையும் ஒன்றிணைத்து 1954 ஆம்
ஆண்டு செப்ரம்பர் 4 ம் திகதி
“பஞ்ச மகா
பலமண்டலய” எனும்
அமைப்பு உருவாக்கப்பட்டது. அத்தோடு 1950 ஆம் ஆண்டில் புத்தபகவானுடைய 2500 ஆவது
வருட பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நிகழ்த்தப்பட்ட பேச்சுகளும் வெளியிடப்பட்ட
நூல்களும் ஒரு மிகப்பெரிய பௌத்த எழுச்சியை சிங்கள மக்களிடையே தோற்றுவித்திருந்தது.
இவ்வாறானநிகழ்வுகள் பௌத்தம் குறித்த தீவிரமான உந்துசக்தியை சிங்களமக்களிடம்
ஏற்படுத்தியது.அதுவே ஐரோப்பிய சார்பு மேட்டுக்குடிகளின் பிரதிநிதியாக தொழில்பட்ட
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்துவந்து தேசியவாத தலைவரான எஸ்.டபிள்யு.ஆர்
.டி.பண்டாரநாயக்கவை வாழ்த்தி வரவேற்று 1956ல் பிரதமராக்கும் காரியத்தை சாதித்தது.
அத்தகைய எழிச்சி ஒன்றையே எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலை
குறிவைத்து முன்னாள் ஜனாதிபதி உருவாக்க திட்டமிட்டுவருவது தெரிகின்றது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக
நிறுத்த வேண்டும் என்ற யோசனை ஒன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ராஜபக்ச
ஆதரவு கட்சிகள் முன்னணியின் நிறைவேற்றுச் சபையில் முன்வைக்க தீர்மானித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கி வரும் முன்னணியின் கூட்டணிக் கட்சித்
தலைவர்கள் அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும்
முயற்சி தோல்வியடைந்தால் மகிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஏற்படுத்தி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை என ஜனநாயக
இடதுசாரி முன்னணியின் தலைவரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான வாசுதேவ
நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இறுதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
நிறைவேற்றுச் சபை ஊடாக மகிந்தவை பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுச் சபையிலும் மகிந்த
ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற யோசனை நிராகரிக்கப்படும்
என்றே தெரியவருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம்
வகிக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சிகள் அதில் இருந்து விலகி மகிந்த தலைமையில்
புதிய கூட்டணியை உருவாக்கும் வாய்ப்புகள் நிறையவே உண்டு
அதுபோன்ற அதிர்சிகளை தடுக்கும் முகமாக புரிந்துணர்வு உடன்படிக்கை
ஒன்றை செய்துகொள்ள ஜனாதிபதியை தலைவராக கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்
பிரதமரை தலைவராக கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் முற்படுகின்றனர். ஏதாவதொரு
கட்சியில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளை பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்துக்கு
மக்கள் பிரதிநிதிகளாக செல்லுகின்றவர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் விருப்பு
வெறுப்புகளுக்கு மதிப்பளிக்காமல் அமைச்சு பதவிகளுக்காக கட்சி தாவுவதாக கடந்த
காலங்களில் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்களை கவனத்தில் கொண்டுதான்
இம்முயற்சி இடம்பெறுவதாக சொல்லப்படுகின்றது. எனினும் இது சுதந்திரக் கட்சி
பிளவுபடும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையில் உருவாகப்போகும்
மூன்றாவது அணியை பலவீனப்படுத்தும் நோக்கிலானதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
என்பது வெளிப்படையானைதொன்றாகும்.
ஸ்ரீலங்கா
சுதந்திரகட்சி பிளவுபடுவதேன்பது இலங்கையை பொறுத்தவரை இலங்கை தேசியத்துக்கு
பாதகமானதொரு நிலைமையையே தோற்றுவிக்கும். அதாவது ஐக்கிய தேசிய கட்சியின் மேற்குலகு
சார் நிகழ்ச்சி நிரலுக்குள் நம்மை முழுவதுமாக அமிழ்த்திவிடும் சந்தர்ப்பத்துக்கே
அது வழிவகுக்கும் .காரணம் இடதுசாரிய கம்யூனிச சார்பு கொண்ட அரசியல் என்பது
இல்லாதுபோன வேளைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே அவற்றின் குறைந்தபட்ச பிரதியீடாக
இதுகாலமும் செயல்பட்டுவந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஸ்ரீலங்கா
சுதந்திர கட்சியின் ஆட்சிகாலங்கள் தான் பெரும் முதலாளிகளிடமிருந்து பாடசாலைகளை
போக்குவரத்தை காணிகளை தோட்டங்களை எல்லாம் பறித்தெடுத்து தேசியமயமாக்கல் கொள்கைகளை
உருவாகியது. சமுக நல சட்டங்களை அமுல்படுத்தியது இலங்கையை குடியரசாகியது இத்தகைய
பெருமைகொண்ட சுதந்திரகட்சி பிளவுபடுவது யாருக்கு லாபம்? என்பதைவிட
இது யாருடைய நிகழ்ச்சி நிரல் என்பதை நாம் ஒவ்வொருவரும் இலங்கையராக
எழுந்துநின்றுகேட்டே ஆகவேண்டிய கேள்வியாகும்.
