சிரியாவின் நெருக்கடி தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டைவிட்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நாற்பது லட்சத்தை கடந்துவிட்டதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
“நமது தலைமுறையினர் சந்திக்கும் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி இது” என்று அந்த அமைப்பின் தலைவர் அண்டோனியோ குட்டெரஸ் இந்த நெருக்கடியை விவரித்துள்ளார்.
துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்டனுக்கு வெளியேறியுள்ள சிரிய அகதிகளுக்கு உதவத் தேவையான நிதியில், நான்கில் ஒரு பங்கு நிதி மட்டுமே அந்த அமைப்புக்குக் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் நிலைமைகள் மோசமடைந்துவரும் நிலையில், பலர் தங்களின் உயிரை பணயம் வைத்து மத்திய தரைக்கடலை கடந்து ஐரோப்பா செல்லத்துவங்கியுள்ளனர். அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் தவிர, சிரியாவுக்கு உள்ளேயே இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எழுபது லட்சம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் சண்டைகள் தொடங்கியதிலிருந்து அந்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய சரிபாதி பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
