இலங்கையின் கிழக்கே அறுகம்பை கடலோரத்தில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
குறித்த இரு சுற்றுலா பயணிகளும் கடந்த 4ம் திகதி இந்தியாவிருந்து இலங்கைக்கு வந்து, மறுநாள் 5ம் திகதி அறுகம்பைக்கு வந்து சேர்ந்ததாக பொத்துவில் போலிஸார் தெரிவிக்கின்றனர்.
பௌத்த மதத்திற்கும் புத்த பெருமானுக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்து கொண்டதாக பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இது தண்டணைக்குரிய குற்றம் என தாங்கள் அறிந்திருக்கவில்லை என இஸ்ரேலிய பிரஜைகள் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தவேளை அங்கேயே அந்த விரிப்பை தாங்கள் கொள்வனவு செய்ததாக இஸ்ரேலிய பிரஜைகள் தமது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த இஸ்ரேலிய தம்பதிகள் இன்று சனிக்கிழமை பொத்துவில் பதில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுதினம் திங்கட்கிழமை நீதிமன்றிற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் பதில் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.