Saturday, 4 July 2015

டோங்கா நாட்டின் புதிய அரசர் முடிசூடினார்

பசுபிக் கடலில் இருக்கும் தீவு தேசமான டோங்காவின் அரசராக ஆறாவது துபௌவுக்கு முடிசூட்டப்பட்டிருக்கிறது.
null
சகோதரரின் மறைவுக்குப் பிறகு ஆறாம் துபௌ அரசராக முடிசூட்டிக்கொண்டிருக்கிறார்.
அவர் மூன்றாண்டுகளுக்கு முன்பே அரச கடமைகளை நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டாலும், இப்போதுதான் முறைப்படி முடிசூட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் நுகு அலோஃபாவில் நடந்த இந்த விழாவில் ஜப்பானின் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட வெளிநாட்டு அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.
தங்கள் அரசரின் தலையை தொடுவது தவறு என டோங்காவாசிகள் கருதுகின்றனர். ஆகவே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒய்வுபெற்ற மதபோதகர் ஒருவர் அரசருக்கு முடிசூட்டினார்.
இதற்கு முன்பு அரசராக இருந்த ஐந்தாம் துபௌ 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரணமடைந்தார்.
இந்த விழாவை ஒட்டி, கடந்த ஒரு வார காலமாகவே தெருக்கள் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தன.
மெத்தடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மதபோதகரான டார்சி உட் அரசருக்கு முடி சூட்டியபோது, ஆயிரக்கணக்கான டோங்கர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதனைக் கண்டுகளித்தனர். சுமார் பதினைந்தாயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஜப்பானிய பட்டத்து இளவரசர் தவிர, ஹங்கேரியின் இளவரசர் ஜார்ஜ் வோன் ஹாஃப்ஸ்பர்க், ஆஸ்த்ரியாவின் இளவரசி மேரி தேரெசே வோன் ஹோஹன்பெர்க் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
முந்தைய அரசர் ஐந்தாம் துபௌ திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆகவே ஐந்தாம் துபௌவின் மறைவுக்குப் பிறகு, 55 வயதான அவரது சகோதரர் இப்போது பதவியேற்றிருக்கிறார்.
1970ஆம் ஆண்டில் டோங்கா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால், அந்நாட்டு அரச குடும்பத்திற்கு 1,000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது.
Loading...