பகிர்க
கிரேக்கத்தின் கடன் நெருக்கடி பிரச்சனைக்கான புதிய தீர்வு திட்டத்தை அடுத்த ஐந்து நாட்களுக்குள் (அதாவது ஞாயிற்றுக்கிழமைக்குள்) கிரேக்க அரசு தன்னிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் கூட்டம் கெடு விதித்திருக்கும் பின்னணியில், கிரேக்கக் கடன் பிரச்சனை தொடர்பில் நிலவும் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டு வரும் புதிய திட்டங்களை கிரேக்க அரசாங்கம் அவசரகதியில் தயார் செய்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இருபத்தி எட்டு உறுப்பு நாடுகளின் தலைவர்களும் எதிர்வரும் ஞாயிறன்று பிரஸ்ஸல்ஸில் சந்திக்கவிருக்கின்றனர்.
இது தான் கிரேக்கத்திற்கு வழங்கப்படும் இறுதி காலக்கெடு என்று ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றிலேயே இது ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதிக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று தான் நம்புவதாக கிரேக்கத்தின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற பல நாடுகளிடம் கிரேக்கத்தின் செயல்பாடு தொடர்பில் எதிர்ப்பும், இந்த சிக்கலுக்கு இணக்கமான தீர்வு எட்டப்படும் என்பது தொடர்பில் நம்பிக்கையின்மையும் இன்னமும் நிலவுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கிரேக்கக் கடன் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு எட்டப்படாத நிலை உருவாகி ஐரோப்பிய நாணயவலயத்தை விட்டு கிரேக்கம் வெளியேறும் நெருக்கடியானதொரு சூழல் உருவானால் அதை எப்படி கையாள்வது என்பது தொடர்பிலான அவசரகால செயற்திட்டம் ஒன்றை தாங்கள் வகுத்து வைத்திருப்பதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் யங்கர் தெரிவித்திருக்கிறார். அப்படி ஒரு சூழல் உருவாவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.