ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஒருசிலர் வெளியேறினர் என்பதற்காக கட்சிக்குள் பிளவு ஏற்படப்போவதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் எம்முடன் இருப்பது எமக்கு பெரிய பலம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர்
சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
ரணிலை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள். ரணிலை காப்பாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி இன்று அவருடன் இல்லை. இப்போது இவர்களின் நிலைமை பரிதாபகரமாக மாறிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக் ஷவை நாம் களமிறக்கியுள்ளோம். குருநாகல் மாவட்டத்தில் மஹிந்தவை களமிறக்கி நாம் பலமான கட்சியாக மீண்டும் உருவெடுப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. உண்மையான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியை நாம் இறுதி நேரத்தில் உருவாக்கியுள்ளோம். இம்முறை எம்முடன் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் 27 அமைப்புகள் ஒன்றிணைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் சகல மாவட்டங்களிலும் நாம் பலமான வேட்பாளர்களை களமிறக்கி ஏனைய கட்சிகளுக்கு சவாலான கட்சியாக உருவாக்கியுள்ளோம்.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எமது கட்சிக்குள் ஒருசிலர் மாற்றுக் கொள்கையில் செயற்பட்டனர். கட்சியை பிளவுபடுத்த இவர்கள் முயற்சித்து வந்தனர். அவ்வாறான நிலையில் இப்போது கட்சியில் இருந்து ஒரு சிலர் வெளியேறிவிட்டனர். இவர்கள் வெளியேறியதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட முடியாது.
அதேபோல் இவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவது அவர்களது தனிப்பட்ட விருப்பமாகும். அதைப்பற்றி நாம் எதையும் விமர்சிக்க முடியாது. அதேபோல் இவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்குள் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டணியில் இருந்து வெளியேறி இன்று ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருக்கும் இவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இவர்கள் எம்முடன் இருக்கவில்லை. அப்போது பொது எதிரணியை வெற்றிபெறச் செய்து ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்ற முக்கிய பங்கினை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும், ஜனநாயகக் கட்சியுமே செய்தன. ஆனால் இன்று இவர்கள் மூவருமே எதிரணியில் இல்லை. ஆகவே இங்கிருந்து வெளியேறிய உறுப்பினர்களுக்கு மக்கள் செல்வாக்கும் இல்லை, அவர்களை காப்பாற்ற கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்பன தற்போது இல்லை. இப்போது இவர்கள் என்ன செய்யப் போகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போல் இந்த பொதுத் தேர்தலை கருத முடியாது.
ஜனாதிபதி தேர்தலின் போது தெற்கில் நாம் பெரும்பான்மை ஆதரவை பெற்றோம். ஒரு சில மாவட்டங்களில் எமது வாக்குவீதம் குறைவடைந்திருந்தாலும் நாம் முழுமையான சிங்கள வாக்குகளை பெற்றிருந்தோம். அதேபோல் நான்கு மாவட்டங்களில் நாம் நான்காயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எம்மால் வெற்றியை எண்ணிப்பார்க்க முடியாது. அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை தனதாக்கும். ஆகவே இம்முறை ஜனாதிபதி எம்முடன் இருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி களத்தில் இறங்கி போட்டியிடுகின்றார். இதுவே எமக்கு பெரிய பலமாகும். எனவே இந்த பலத்துடன் எம்மால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்றார்.
