ஷாங்காய்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் எங்கள் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டு இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று சீன ராணுவம் தெரிவித்து உள்ளது.
ஷாங்காய் நகரில் உள்ள கடற்படை முகாமில் அதன் தலைவர் வெய் ஜியான்டாங், இந்திய செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கடற்கொள்ளைத் தடுப்பு நடவடிக்கைகளில், போர்க் கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றுடன் நீர்மூழ்கிக் கப்பல்களும் இணைந்து செயல்படும்.
இதனைக் கண்டு இந்தியா கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், சீனாவின் பாதுகாப்புக் கொள்கை இயல்பிலேயே பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. மற்ற நாடுகளை அச்சுறுத்துவதற்காக, அதிகார பலமிக்க நாடாகக் காட்டிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
சீனா-பாகிஸ்தான் இடையிலான உறவு குறித்தும் இந்தியா கவலைப்படத் தேவையில்லை. எதிர்காலத்தில் சீனா-இந்தியா இடையிலான உறவு மேலும் வலுப்படும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டு சீனா வந்தபோது, இரு நாடுகளும் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டன. அதன்படி, இரு நாட்டு கடற்படைகளும் ஒத்துழைப்புடன் செயல்படும். கடல் பகுதியில் தேடுதல், மீட்புப் பணிகளில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்படும்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவில், எந்தவித சந்தேகத்தையும் உருவாக்க சீனா விரும்பவில்லை. சீன கடற்படையுடன் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்" என்றார்.MN