பெய்ஜிங்: சீனாவில் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நில நடுக்கத்தில் 6 பேர் பலியாயினர். குடியிருப்புகள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும் சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நில நடுக்கம் 37.6 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.2 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும், பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம், ஹோட்டானில் பிஷான் கவுண்டி பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. பல வீடுகள் இடிந்து தரை மட்டமாகின.
வீடுகளும், கட்டடங்களும் குலுங்கியதால், பொதுமக்கள் பயத்தில் வீதிகளில் திரண்டு நின்றனர். இருப்பினும் இந்த நில நடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், 50 பேர் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
நில நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அங்கு அடுத்தடுத்து 2 நில அதிர்வுகள் ஏற்பட்டன. நில நடுக்கத்தால் ஹோட்டான் விமான நிலையம் மூடப்பட்டது. இது தொடர்பாக சீனா நில நடுக்க நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘நில நடுக்கத்தை தொடர்ந்து ஹோட்டான் பகுதியில் 2 ஆம் நிலை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.
நில நடுக்கம் தாக்கிய பகுதியில் உய்குர் இன மக்கள் பெருவாரியாக வசிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பிலிப்பைன் தீவிலும் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.13 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இதன் சேத விவரங்கள் தெரிய வரவில்லை. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.MN