“ஆட்சி மாற்றத்தின் மூலம், அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தக்க வைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால், இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு – எந்த சக்திகள் தற்போதைய ஜனாதிபதிக்குத் துணையாக நின்றார்களோ, அந்த சக்திகளோடு இன்றைய ஜனாதிபதி நின்றாக வேண்டும்” என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
இல்லையென்றால், இந்த ஜனாதிபதியை தாங்கள் அங்கீகரித்துக் கொண்டு அரசியல் செய்வதில், சங்கடமானதொரு சூழ்நிலை உருவாகிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.எம்.எம். றிஸாம், அவரின் அக்கரைப்பற்று இல்லத்தில் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட மு.கா. தலைவர் ஹக்கீம், அங்கிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே – மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“நாங்கள் உருவாக்கிய யுகப் புரட்சியை, தலைகீழாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் நடந்து கொண்டுள்ளதொரு சூழலில்தான், இந்த இப்தார் நிகழ்வில் நாங்கள் கூடியிருக்கின்றோம்.
தற்போது, அரசியலில் நடந்திருக்கின்ற நிகழ்வானது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேரம்பேசும் சக்தியினை அதி உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் மூலம், அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தக்க வைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால், இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு – எந்த சக்திகள் தற்போதைய ஜனாதிபதிக்குத் துணையாக நின்றார்களோ, அந்த சக்திகளோடு இன்றைய ஜனாதிபதி நின்றாக வேண்டும்.
இல்லையென்றால், இந்த ஜனாதிபதியை நாங்கள் அங்கீகரித்துக் கொண்டு அரசியல் செய்வதில், சங்கடமானதொரு சூழ்நிலை உருவாகிவிடும். எது எப்படியிருந்தாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மு.காங்கிரசை தனித்துக் களமிறக்கினால்,
தாங்கள் வென்று விடலாமென்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மிகத் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் – இன்று எமக்குக் கடைசியாகக் கிடைத்த செய்தியாகும்.
மு.காங்கிரஸ் தனித்துக் களமிறங்கினால் – யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தவிர்ந்த எட்டு அல்லது 10 மாவட்டங்களில், ஐ.தே.கட்சியை தோற்கடித்து விடலாமென்று, ஐ.ம.சு.கூட்டமைப்பு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
மு.காங்கிரசோடு ஐ.தே.கட்சி நேற்று முன்தினம் சுமூகமாகப் பேசியபோதும், அவர்களிடத்தில் ஒரு வித ‘கறாரான’ மனநிலை உள்ளது. ஆயினும், முகாங்கிரசினை விட்டு விடுவதற்கும் ஐ.தே.கட்சிக்கு மனமில்லை.
மு.காங்கிசை தனித்துப் போட்டியிடுவதற்கு விட்டால், 05 அல்லது 06 ஆசனங்களை பெற்றாலும், அடுத்த ஆட்சியினைத் தீர்மானிக்கிற சக்தியாக மாறிப்போய் விடும் என்று ஐ.தே.கட்சி அச்சப்படுகிறது.
இந்த நிலையில், மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் என்ன என்கிற ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் வகையில், எங்கள் கட்சி முக்கியஸ்தர;களை ஐ.ம.சு.கூட்டமைப்பானது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறது.
இருந்தபோதும், மு.காங்கிரஸ் ஒருபோதும் ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் களமிறங்கப் போவதில்லை. எது எவ்வாறாயினும், எமது சமூகத்தின் மீட்சிக்காக, மு.காங்கிரசின் வாக்கு வங்கியினுடைய வலுவினை நாம் பிரயோகிக்க வேண்டிய தேவையுள்ளது.
எனவே, அது தொடர்பில், கட்சி முக்கியஸ்தர்களுடன் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் நாம் மீண்டும் பேசவுள்ளோம். நாட்டில் என்ன மாற்றம் வருகிறதோ, அந்த மாற்றம் அக்கரைப்பற்றிலும் வரவேண்டுமென்பதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்கறையாக உள்ளது.
அந்த அக்கறையினைக் கவனத்தில் எடுக்கும் வகையில், மு.காங்கிரசின் தேர்தல் வியூகம் இருக்கும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்லி வைக்க முடியும்.
இந்த நிலையில், அதற்கான அரைவாசி வேலையினை நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ பார்த்து விட்டார். மிகுதி வேலையினைத்தான் மு.காங்கிரஸ் பார்த்துக்கொள்ளும். மஹிந்த ராஜபக்ஷ வருகிற அணிக்கு – முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் போகாது.
ஏனென்றால், மஹிந்த களமிறங்கும் அணிக்கு வாக்களிப்பதானது, எமது சமூகம் பட்ட கஷ்டங்கள், அவலங்களிலிருந்து அடைந்திருக்கின்ற மீட்சியை, மீண்டும் அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிடும்” என்றார்.
இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குநரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸீர், ஏ.எல். தவம், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்பாளர் ஏ.எல். மர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
|