Wednesday, 15 July 2015

சீனத் தீவுக் கூட்டத்தின் சீனப் பெயரை நீக்கியது கூகுள்

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற் பகுதியில் இருந்த தீவுகளுக்கு சூட்டப்பட்டிருந்த சீனப் பெயரை கூகுள் தனது புவி வரைபடத்திலிருந்து நீக்கியுள்ளது. ஃபிலிப்பைன்சைச் சேர்ந்த பலரிடமிருந்து வந்த புகார்களையடுத்து கூகுள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
null
தென் சீனக் கடலில் உள்ள மீன் வளத்திற்காக, சீனா - ஃபிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் ஸ்கேர்பரோ ஷோல் என்ற தீவுக் கூட்டங்களுக்கு உரிமை கோரி வருகின்றன.
சீன மொழியில் ஸோங்ஸா தீவுகள் என்று அறியப்பட்டிருந்த அந்தத் தீவுகள், பவளப்பாறைத் தொகுப்புகளை, அவற்றின் சர்வதேசப் பெயரான ஸ்கார்பாரோ ஷோல் என்று கூகுள் மாற்றியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள மீன் வளத்தின் காரணமாக சீனாவும் ஃபிலிப்பைன்சும் அந்தப் பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாயத்தில் ஃபிலிப்பைன்ஸ் முறையிட்டிருக்கிறது. ஆனால், சீனா இந்த விசாரணையில் பங்கேற்க மறுத்துவிட்டது.
அந்தத் தீவுப் பகுதிக்கு சீனப் பெயரை கூகுள் மேப்ஸ் சூட்டியிருப்பதன் மூலம், சீனாவின் வாதத்திற்கு அது வலுச் சேர்க்கிறது என இணையம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அந்தப் பகுதியை சீனா ஹுவாங்கியான் தீவு என்றும் ஃபிலிப்பைன்ஸ் பனடாக் ஷோல் என்றும் அழைத்துவருகின்றன.
2012ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் சீனாவும் ஃபிலிப்பைன்ஸும் தங்களுடைய கப்பல்களை பல வாரங்களுக்கு நிறுத்தியிருந்தது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
நிலப்பகுதியின் பெயர்கள் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை தாங்கள் புரிந்துக்கொண்டிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
Loading...