இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் லாஹூகல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பாணம பகுதியிலிருந்து, 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில், சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கடற்படை மற்றும் விமானப்படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்கள் தமது காணிகளை மீள வழங்கக் கோரி தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
பாணம பகுதியில் ஐந்து கிராமங்களில் சுமார் 1220 ஏக்கர் அளவிலான காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அப்பகுதியிலிருந்து இடம்பெயரச் செய்யப்பட்ட மக்கள், இந்த நடவடிக்கையால் தமது இருப்பிடம், வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
அம்பாறை மாவட்டம் பாணம பகுதி ஒரு காலத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த இடம் என்று கூறப்படுகின்றபோதிலும், தற்போது சிங்கள, தமிழ் மக்கள் என இரு சமூகத்தினரும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இவ்விரு தரப்பினரும் நில அபகரிப்பால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளர்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தாம் பாரம்பரியமாக தமது நிலத்தில் விவசாயம்செய்வது மற்றும் மீன்பிடித்தலில் ஈடுபதல் போன்றவற்றின் மூலம் வாழ்வாதரத்தை ஈட்டிவந்த போதிலும் தற்போது கூலி வேலை செய்ய வேண்டி துர்பாக்கிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக, இந்நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவரும் பாணமயை பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதான அமைப்பாளருமான புஞ்சிஹால சோமசிறி தெரிவித்தார்.
இராணுவ கிராமம் அமைக்க கேட்டதால், நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் அதற்கு பதிலாக ஹோட்டலொன்று அங்கு அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இதேவேளை இங்கு கடற்படை மற்றும் விமானப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள 1220 ஏக்கர் நிலத்தில், 480 ஏக்கர் நிலம் பொதுமக்களுக்கு சொந்தமானது எனவும் அங்கு தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல் மற்றும் சர்வதேச தொடர்புகளுக்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுச் சூழல் நிபுணரும் பாணம மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளின் செயற்பாட்டாளருமான சஜீவ சமிக்கார பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.
