புதுடெல்லி: வெடிகுண்டு இருப்பதாக கழிவறை கண்ணாடியில் எழுதப்பட்டிருந்த மிரட்டல் வாசகத்தை தொடர்ந்து, துருக்கி விமானம் ஒன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம்
148 பயணிகளுடன் துருக்கி விமானம் ஒன்று பாங்காக்கிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு இன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமானத்தின் கழிவறை கண்ணாடியில் லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்டிருந்தது. இதனை விமான பணியாளர் ஒருவர் பார்த்து விமானியிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் விமானத்தை அவசரமாக தரை இறக்குவதென்று முடிவு செய்தார்.
டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்
அப்போது அந்த விமானம் இந்தியாவின் நாக்பூர் நகருக்கு மேல் பறந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்த விமானி நாக்பூர் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு, விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். ஆனால் விமான கட்டுப்பாட்டு மைய அதிகாரி, டெல்லி விமான நிலையத்திற்கு சென்று தரையிறக்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, அந்த விமானத்தின் விமானி, டெல்லி விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த விமானம் அவசரமாக தரையிறக்க அனுமதி பெறப்பட்டது.
விமான நிலையத்தில் அவசர நிலை
அந்த விமானம் தரை இறக்கப்பட்டதை தொடர்ந்து, பயணிகள் வெளியேற்றப்பட்டு ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த விமானத்தை சுற்றி பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு படை ஏஜென்சியினரும் உஷார்படுத்தப்பட்டனர். 5 தீயணைப்பு வண்டிகளும் அவசரமாக விரைந்தன.
மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய பாதுகாப்பு படை உயரதிகாரிகள் அவசர கூட்டத்தை கூட்டி, இதுகுறித்து விவாதித்தனர்.
வெடிகுண்டு இல்லை; மிரட்டலே
வெடிகுண்டு நிபுணர்கள் அவசரமாக விரைந்து சோதனை மேற்கொண்ட நிலையில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்ததாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே சமயம் குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தை கடத்த திட்டமா?
இதனிடையே அந்த விமானத்தை கடத்தும் நோக்கில், விமானத்தில் பயணித்த ஒருவரே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கழிவறையில் எழுதி இருக்கக்கூடும் என்ற கோணத்தையும் மறுப்பதற்கில்லை என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே 'ரா' மற்றும் 'ஐபி' ஆகிய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள், விமான பயணிகளின் விவரங்களை கூட்டாக இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் துருக்கி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பயணிகளிடம் விசாரணை முடிவடைந்த பின்னர், துருக்கி விமானம் புறப்பட்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.