Sunday, 12 July 2015

கட்டார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும்

கட்டார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் 10-07-2015 அன்று வெள்ளிக்கிழமை கட்டார் டோஹாவிலுள்ள BCAS கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்டார் வாழ் கல்முனை சகோதரர்கள் சுமார் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இன்று “கல்முனை மண் எதிர்நோக்குகின்ற பல்துறை சார்ந்த சவால்களுக்கு மத்திய கிழக்கில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையான இளைஞர் சக்தியின் பங்களிப்பு என்ன?” என்ற கேள்விக்கான தீர்வினை பெரும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பான நிகழ்வை சகோதரர். MLM. ரௌஸுல் இலாஹி அவர்கள் தொகுத்து வழங்கி, வரவேற்புரையும் நிகழ்த்தினார்.

இதனையடுத்து தலைமையேற்று உரையாற்றிய சகோதரர். முபாரிஸ் எம். ஹனிபா அவர்கள், வரலாற்று நெடுகிலும் கல்முனை மண் முஸ்லிம் தேசியத்துக்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் கல்முனை மண்ணின் சிறப்புகள் குறித்து சிறிது அலசியதுடன், கல்முனை மண் சமகாலத்தில் எதிர்நோக்குகின்ற கல்வி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகவியல் துறைகளில் ஏற்பட்ட பலவீனங்கள் குறித்தும் அதற்கான காரணிகளையும் முன்வைத்ததோடு, இதிலிருந்து எமது மண்ணை எழுச்சியை நோக்கி நகர்த்த கட்டார் வாழ் அனைத்து சகோதரர்களினதும் பங்களிப்பை விளக்கியும், வேண்டியும் தனது உரையை நிறைவு செய்தார்.

இதனைத்தொடருந்து உரையாற்றிய சகோதரர். முஹம்மத் பிரோஸ் அவர்கள் எம்மவர்களின் உள்ளங்களில் பல்வேறு காரணங்களினால் திணிக்கப்பட்ட வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் மூலமே மேற்படி சவால்களுக்கு முகம்கொடுத்து எழுச்சி பெறமுடியும் என்ற கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய சகோதரர்கள் S.L. ஹமீத் மற்றும் M.M. ஜெஸ்மின் அவர்கள் கட்டார் வாழ் சகோதரர்களின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசியதோடு, அனைத்து சகோதரர்களும் ஒரு அமைப்பின் கீழ் செயற்படுவதன் மூலமே நாம் அடைய நினைக்கும் இலக்கை அடையமுடியும் எனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பை வேண்டிய அழைப்பையும் விடுத்தார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வை தொடர்ந்து நிகழ்வின் இரண்டாம் அமர்வு ஆரம்பமானது. இதில் கலந்துகொண்ட சகோதரர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கல்முனை மண் குறித்த தங்களது ஆதங்கங்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தார்கள். எல்லோருடைய மஷூராக்களையும் உள்ளடக்கியதாக அனைத்து கட்டார் வாழ் சகோதர்களையும் இணைத்து ஒரு பலமான சிவில் சமூக கட்டமைப்பை நிறுவி அதன் மூலம் தங்களால் முடிந்ததான பங்களிப்பை செய்வதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதன் முதல்கட்டமாக மேற்படி சிவில் சமூக கட்டமைப்பை காலக்கிரமத்தில் நிறுவுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ள 15 நபர்கள் கொண்ட செயற்குழு தெரிவுசெய்யப்பட்டதோடு விரைவில் உருவாக்கப்பட இருக்கின்ற கட்டமைப்பினூடாக நடைமுறைப்படுத்தவுள்ள செயற்திட்டங்கள், நடைமுறைச்சவால்கள், அதற்கான தீர்வுகள், நிதி மூலங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.

இறுதியாக மிக குறுகிய காலஇடைவெளியில் குறித்த ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதனால் அனைத்து கட்டார் வாழ் கல்முனை சகோதரர்களையும் இணைத்துக்கொள்ள முடியாமல் போனதை இட்டு வருத்தம் தெரிவித்த சகோதரர் நிப்ராஸ் மன்சூர் அவர்கள், எதிர்கால ஒன்றுகூடலில் முடிந்தளவு அனைத்து சகோதரர்களையும் இணைத்து செயற்படுவதற்கான முஸ்தீபுகள் எட்டப்படும் என தெரிவித்து தனது நன்றி நவிலலோடு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

Displaying 07.jpg


Displaying 11.jpg

 
Displaying 12.jpg

Displaying 16.jpg

Loading...