பரபரப்புக்கு சற்று பஞ்சமில்லாமல் இருக்கின்றது இலங்கையின் தேர்தல் களம்.
கட்சித் தாவல்கள் , காட்டிக்கொடுப்புகள் , காலை வாருதல் என கனவான் அரசியலுக்கு சற்றும் பொருந்தாத இலட்சணங்களை தாங்கி நிற்கின்றனர் இலங்கை அரசியல்வாதிகள்.
இவை ஒருபுறம் இருக்க இத்தேர்தலில் அதிகம் பேசப்படும் நபராக மஹிந்த ராஜபக்ஷ திகழ்கின்றார். முன்னாள் ஜனாதிபதியான அவர் பொதுத் தேர்தலில் மீண்டும் களமிறங்கியிருப்பதானது ஒரு சாராருக்கு சந்தோசத்தையும், ஒரு சாராருக்கு கவலை மற்றும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இவர்களைத் தவிர ஒரு சிலருக்கு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது மஹிந்தவின் அரசியல் மீள் பிரவேசம்.
மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்பாதோர் , கடைசி நேரத்தில் மைத்திரி, மஹிந்தவை தடுத்து விடுவார், சந்திரிக்கா தலையிட்டு மைத்திரியை தடுக்க வைத்து விடுவார் என தங்களை தாமே சமாதானப்படுத்தி இறுதியில் இலவு காத்த கிளி போல் ஏமாற்றமடைந்ததே மிச்சம்.
எது எவ்வாறு இருந்தாலும் மஹிந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ,குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியுள்ளது.
இந்நிலையில் மஹிந்தவை , குருநாகல் மாவட்ட த்தில் எதிர்கொள்ள பீல்ட் மார்ஷல் பொன்சேகா தயாராகி வருவதாக தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தில் பொன்சேகா போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்ட போதிலும் , அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாகவும் அவர் குருநாகலில் மஹிந்தவை எதிர்த்து போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஐ.தே.கவின் புதிய கூட்டணியாக கருதப்படும் ஐக்கிய தேசிய முன்னணியில் , யானைச் சின்னத்தில் பொன்சேகா போட்டியிடுவார் எனவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக போட்டியிட்டு , தோல்வியடைந்த பின்னர் பல்வேறு பழிவாங்கல்களுக்கு முகங்கொடுத்திருந்தார் அவர்.
இந்நிலையில் அவற்றுக்கு பதிலடி கொடுக்கவே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொன்சேகா களமிறங்கும் பட்சத்தில் , பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை எதிர்ப்பார்த்திருக்கும் மஹிந்தவுக்கு அது சவாலாக அமையும் என்பது உறுதி
