Sunday, 5 July 2015

ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து 'ஹெல உறுமய வெளியேறுகிறது'

கடும்போக்கு பெளத்தவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை கடுமையாக எதிர்த்தது (கோப்பு)
இலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்குஅதன் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றின்போது, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இந்த முடிவை அறிவித்துள்ளார்.
நல்லாட்சியுடன் கூடிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முடியாமல் போயுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, நல்லாட்சியும் ஒழுக்கமுமுள்ள தேசமொன்றை உருவாக்குவதற்கு உதவக்கூடிய புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ரணவக்க தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் சமூகக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
தேசத்துக்கு ஆதரவான தரப்பினருடன் புதிய கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு அவர் கடந்த காலங்களில் தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அண்மையில் தீர்மானித்தது.
குறித்த தீர்மானம் பற்றி செய்தியாளர்களிடம் கருத்துக்கூற மறுத்துவிட்ட சம்பிக்க ரணவக்க, 'அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்' என்று பதிலளித்துள்ளார்.
Loading...