Saturday, 18 July 2015

மைத்திரி குறித்து வாய் திறக்காத மஹிந்த!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் நேற்று அநுராதபுரத்தில் ஆரம்பமானது. இதில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ உட்படப் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
ஆனால், தனக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த ஜனாதிபதி மைத்திரிபால குறித்து மஹிந்த கருத்து எதனையும் நேற்றைய கூட்டத்தில் வெளியிடவில்லை.
மஹிந்த தனது உரையில் விடுதலைப்புலிகள் குறித்து கருத்து வெளியிட்டு, இனவாதத்தைக் கக்கினார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கடுமையாகச் சாடினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் அவர் மறைமுகமாகச் சாடினார்.
ஆனால், ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கு நேற்றைய கூட்டத்தில் பதில் எதனையும் மஹிந்த வழங்கவில்லை.
கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது போலவே, எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு நேற்றைய கூட்டத்தில் பதில் வழங்குவேன் என்று கடந்த புதன்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் மஹிந்த கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1110975
Loading...