இலங்கையில் ஊடக சுதந்திரம் 'மீண்டும் அச்சுறுத்தலில்'?
இலங்கையில் பத்திரிகை கவுன்சில் சட்டத்தின் (Press Council Law No. 5 of 1973) ஏற்பாடுகள் ஊடாக, இலங்கை பத்திரிகை கவுன்சிலை மீண்டும் இயங்கச் செய்வதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக சுதந்திரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற சுயாதீன ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு குற்றம்சாட்டுகின்றது.
அரசின் நியமன உறுப்பினர்களைக் கொண்ட பத்திரிகை கவுன்சில், ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக செயற்படும் ஆபத்து உள்ளதாகவும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கூறுகின்றது.
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகவியலாளர்களை சிறையில் தள்ளும் சட்டத்துக்கு உயிர் கொடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.
ஊடகங்களைக் கண்காணிப்பதற்கான சுயாதீன அமைப்பொன்று ஏற்கனவே இயங்குகின்ற நிலையில், அரச நியமனமான பத்திரிகை கவுன்சில் தேவையற்றது என்ற கருத்தை நீண்டகாலமாக தாங்கள் வலியுறுத்தி வந்துள்ளதாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி குமார் லோபேஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை பத்திரிகை கவுன்சிலை மீண்டும் இயங்கச் செய்துள்ளதாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கூறுகின்றது.