விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளது தமிழ் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகிறார்.
அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவடைந்த கட்டத்தில் முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வந்திருந்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும், இப்போது காலம் கடந்து பிரவேசிப்பது தற்போதைய சூழ்நிலையில் கடும்போக்குடைய பேரினவாத சக்திகளுக்கு சாதகமாகவே அமைந்து விடலாம் என்றும் அவர் கூறுகிறார்.
பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் 10 வருடங்களுக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி ஜனநாயக அரசியலில் இணைந்து கொண்டவர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான இவர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நாடாமன்றத் தேர்தலில் தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து மாறுபடும் அரசியல் சூழலுக்கு ஏற்றவகையில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மைத்திரி-மகிந்த மீண்டும் இணைந்திருப்பது என்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.