வாஷிங்டனில் பூ சான் என்ற புகைப்படக்காரர் பார்க்கும் விஷயங்களை எல்லாம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந் தார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஒரு கழுகு அதிகாலையில் உணவு தேடிப் பறந்துகொண்டிருந்தது. திடீரென்று அந்தக் கழுகின் முதுகில் ஒரு காகம் வந்து அமர்ந்தது.
முதுகில் காகத்தைச் சுமந்தபடி கழுகு சென்றுகொண்டிருந்தது. சில நொடிகள் ஓய்வெடுத்த பிறகு கழுகின் முதுகிலிருந்து காகம் பறந்து சென்றுவிட்டது. இந்தக் காட்சியை அற்புதமாகத் தன் கேமராவில் படம் எடுத்துவிட்டார் பூ சான்.
எவ்வளவு தைரியம் இந்தக் காகத்துக்கு!
லைபீரியாவில் வசிக்கிறார் 37 வயது வெஸ்ஸி ஃப்ரீமேன். மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் வெஸ்ஸியால் பார்க்க முடியாது. ஆனால் பிரமாதமான இசை ஞானம் உண்டு. ஒரு தகர டின்னில் மரக்கட்டையை வைத்து, அதில் மூன்று கம்பிகளை இணைத்து, கிடார் ஆகப் பயன்படுத்தி வருகிறார். உருளைக் கிழங்கு சிப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிகில், சச்சின் ராம்சந்தானியின் கவனத்துக்கு வந்தார் வெஸ்ஸி. இசையைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தனர். தங்களுடைய சிப்ஸ் விளம்பரத்துக்கு ஒரு பாடலை உருவாக்கித் தரும்படிக் கேட்டனர்.
அரை நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக அந்தப் பாடல் வெளிவந்தது. இந்தத் தகர டப்பாவில் இருந்து இப்படி ஓர் இசையா என்று எல்லோரும் மெய்மறந்து போனார்கள். வெஸ்ஸியின் வீடியோ இணையத்தில் வெளியானது. உலகம் முழுவதும் ஏராளமானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நிகிலும் சச்சின் ராம்சந்தானியும் 45 லட்சம் ரூபாய் நன்கொடையை வெஸ்ஸிக்காகச் சேகரித்து வருகிறார்கள். இந்தப் பணத்தின் மூலம் வெஸ்ஸிக்குப் பார்வை கிடைக்கவும், வீடு வாங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திறமைக்கு மரியாதை!
இங்கிலாந்தின் கார்னிஷ் கடற்கரைக்கு அருகில் வசித்து வருகிறார் 77 வயது கிறிஸ்டின் பவ்டென். அவருக்குக் கேட்கும் சக்தி இல்லை. அதனால் புதிதாக ஹியரிங் எய்ட் ஒன்றை வாங்கிப் பொருத்தியிருந்தார். தோட்டத்தில் நின்று கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது, யாரோ அலறும் சத்தம் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். ஒருவரும் தென்படவில்லை. ஆனால் அலறல் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. கணவரிடம் விஷயத்தைச் சொன்னார். அப்படி ஒரு சத்தமும் தனக்குக் கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார் அவர். ஆனாலும் கிறிஸ்டினால் அலறலைப் புறக்கணிக்க முடியவில்லை. ஒரு பைனாகுலர் மூலம் கடலை ஆராய்ந்தார். அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருவர் படகில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். உடனே அருகில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தினார். சிலர் படகில் சென்று, அவர்களைப் பத்திரமாக மீட்டு வந்தனர். எல்லோரும் கிறிஸ்டினைப் பாராட்டிக்கொண்டிருக்க, அவரோ ஹியரிங் எய்டைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்!
அட… கேட்கற சக்தியைக் கொடுத்ததோடு இரண்டு உயிர்களையும் காப்பாற்றியிருக்கே ஹியரிங் எய்ட்!
சீனாவின் டியான்ஜின் பகுதியில் வசிக்கிறார் 65 வயது யாங் ஸியாவோயுன். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். பிராணிகள் மீது அளவற்ற அன்பு செலுத்தி வருகிறார். இதுவரை 1500 நாய்களையும் 200 பூனைகளையும் ஒரே இடத்தில் வளர்த்து வருகிறார். சமீபத்தில் யுலின் நகரில் நாய் இறைச்சி திருவிழாவில் பலியிட இருந்த 100 நாய்களை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார். இதற்காக 1500 மைல்கள் பயணம் செய்து, 65 ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்து, நாய்களைக் காப்பாற்றியிருக்கிறார்.
ஒருநாளைக்கு இருமுறை வேக வைத்த சோள ரொட்டிகளை உணவாக நாய்களுக்கு வழங்குகிறார். நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவிடுவதும் பராமரிப்பதும் எளிதான காரியம் இல்லை. அத்தனையையும் யாங் ஒருவரே பார்த்துக்கொள்கிறார். யாங்குக்கு உதவும் விதத்தில் பலரும் நன்கொடைகள், மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
கருணை உள்ளம்!
