Friday, 24 July 2015

அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் ராஜினாமா செய்ய முடிவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
கட்சியின் நன்மை கருதி ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தென்னக்கோன் தெரிவித்திருக்கிறார்.
இன்று தம்புள்ளை பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த முடிவை அவர் அறிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு எடுத்த தீர்மானம் ஒன்றின் அடிப்படையிலேயே அரசில் அமைச்சர் பதவியை ஏற்க முடிவுசெய்ததாகவும் ஆனால் தற்போது அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் இந்தப் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக விவாதிப்பதற்குக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுமாறு தான் பல முறை கட்சித் தலைவர் என்ற முறையில் ஜனாதிபாதி மைத்ரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அது நடக்கவில்லையென்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், இதற்கு மேல் அமைச்சர் பதவியை வகிக்க முடியாதென்று கூறிய ஜனக்க பண்டார தென்னகோன் கட்சியின் நன்மை கருதி பதவியை இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதே தனது இலக்கு என்று தெரிவித்த தென்னக்கோன், தனிப்பட்ட லாபங்களை கருதி தானேப்போதும் செயற்படவில்லை என்று கூறினார்.
எதிர்வரும் நாட்களில் மேலும் பல அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவாரென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு ஜனக பண்டார தென்னகோன் அண்மையில் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி சிறிசேனவின் உரை முலம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்படுமெனவும் அவர் கூறியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதான அமைப்பாளராக செயற்படும் ஜனக்க பண்டார தென்னகோன் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை எதிர்வரும் 27ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Loading...