Wednesday, 22 July 2015

மீரிஹானவில் சிக்கிய வெள்ளை வான் கோத்தாவின் நாடகம்? – கைதான படையினருக்குப் பிணை

மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிறிலங்காப் படையினர் மூவரும் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 7.30 மணியளவில் மீரிஹான பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவில் உடையில் இருந்த இவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 13 ரவைகள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் இவர்கள் பயணம் செய்த வெள்ளை வானின் இலக்கத் தகடு மாற்றப்பட்டிருந்தது.
மீரிஹான பகுதியிலேயே சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரது தற்போதைய வதிவிடங்கள் உள்ளன.
இந்தநிலையில், அப்பகுதியில் வைத்து வெள்ளை வானில் இருந்த ஆயுததாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
meerihana-white van (1)
meerihana-white van (2)
meerihana-white van (3)
படங்கள் – லங்காதீப
அதேவேளை, கைது செய்யப்பட்ட ஒரு அதிகாரி மற்றும் இரு படையினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இன்று நுகேகொட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிவான் அவர்களை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவக் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் மெய்க்காவலர்களாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவு தளபதியாக இருக்கிறார்.
இவர் முன்னர் 55வது மற்றும் 59வது டிவிசன்களின் கட்டளை அதிகாரியாக வன்னி இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்திருந்தார் என்பதும், கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருங்கும் வேளையில் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து என்ற அனுதாப அலையை உருவாக்கும் நோக்கில், இந்த வெள்ளை வான் நாடகம் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, உதய கம்மன்பில, ஜி.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகளை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...