இலங்கையிலிருந்து மீன்கள் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது விதித்துள்ள தடை அடுத்த சில மாதங்களில் விலக்கிக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பயனாக எதிர்வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தடைகள் நீக்கப்படலாம் என்ற நம்பிக்கையையும் ரணில் வெளியிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரிலும் இன்று மாலை நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டங்களில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் அடுத்த ஆட்சி அமையும்போது 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைத்து கைத்தொழில் வர்த்தக வலயங்கள் பல ஏற்படுத்தப்படும் என்று ரணில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் பொருளாதரத்தை மேம்படுத்தும் வகையில் திருகோணமலையை மையப்படுத்தி பெரிய பொருளாதார வலயமொன்று ஏற்படுத்தப்பட்டு, மட்டக்களப்பு, பொலநறுவ, அனுராதபுரம் மற்றும் வன்னி ஆகிய இடங்களிலும் கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படும் என்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
திருகோணமலை மாவட்டம் சம்பூரில் ஏற்கனவே இந்திய உதவியுடனான அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான வேலைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன உதவியுடன் அந்த பகுதியில் மற்றுமோர் அனல் மின் உற்பத்தி நிலையமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்று அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மின்சகதி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
