சீனாவின் துறைமுக நகரான தியான்ஜின் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 7 பேர் பலியாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சீன நேரப்படி இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
இந்த விபத்தினால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் பெரும் உயரத்திற்கு எரியும் படங்களும் அருகிலிருக்கும் கட்டங்கள் சேதமடைந்திருக்கும் படங்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்த விபத்தில் காயமடைந்த பலர் அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றனர்.
முதலில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு 30 வினாடிகளுக்குப் பிறகு மேலும் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.
தியான்ஜின் நகரிலிருந்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த விபத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டன.
இது ஒரு தொழிற்சாலை சார்ந்த விபத்தைப் போலத் தெரிவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருகில் இருக்கும் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிவதாக சீன தேசிய வானொலி தெரிவிக்கிறது.
தியான்ஜின் நகரின் பினாய் மேம்பாட்டு மண்டலத்தில் அபாயகரமான பொருட்களை வைக்கும் சேமித்து கிடங்கில் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனத் தலைநகரான பெய்ஜிங்கிற்கு தென்கிழக்கில் அமைந்திருக்கும் தியான்ஜின் பெரிய துறைமுக நகராகும். தொழிற்சாலைகளும் அதிகம் உள்ள பகுதி.
