இரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்படுகின்ற புதிய சுமுகநிலையின் அடையாளமாக இந்த தூதரகத் திறப்பு பார்க்கப்படுகின்றது.
தூதரக கட்டடத்தில் எளியமுறையில் நடந்த திறப்புவிழாவில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹம்மொண்ட் கலந்துகொண்டார்.
2003-ம் ஆண்டுக்குப் பின்னர் பிரிட்டனின் அமைச்சர் ஒருவர் இரானுக்கு மேற்கொள்கின்ற முதல் பயணம் இதுவே.
'ஐக்கிய இராச்சியம்- இரான் உறவுகளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணம்' இது என்று தூதரக திறப்பு நிகழ்வை வர்ணித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மூடப்பட்டது.
இரானுக்கும் மேற்குலக சக்திகளுக்கும் இடையில் கடந்த மாதம் எட்டப்பட்ட அணுசக்தி பாவனை தொடர்பான ஒப்பந்தத்தின் மூலம், மேற்குலகுடனான இராஜதந்திர உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
