|
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக எனக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் மூலமான பாராளுமன்ற பிரதிநிதித்துவமானது ஒரு குறுகிய காலத்துக்கானது எனத் தெரிவிக்கும் மு.கா.வின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் கட்சித்தலைமை கோருகின்ற பட்சத்தில் அப்பதவியை இராஜினாமாச் செய்வதற்கும் தயாராகவுள்ளதாகவும் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அவர் கருத்துத்தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தேசியப்பட்டியலூடாக இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்நிலையில் குறுகிய காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியிலிருந்து அப்பதவிக்கு யாரைத்தேர்ந்தெடுப்பது என்பது கட்சிக்கு சிக்கல் நிலையை தோற்றுவித்தது.
காரணம் தேர்தல் செயலகம் தேசியப்பட்டியல் விபரங்களை அவசரமாக சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தமையாகும். இந்நிலையில் கட்சித்தலைமை நாடளாவிய ரீதியிலிருந்து அப்பதவிக்கு ஏற்ற தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை தலைமைக்கு மிகவும் விசுவாசமான இருவரை தெரிவு செய்து தேசியப்பட்டியலுக்கு கட்சித்தலைமையினூடாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அவ்விருவர்களுள் நானும் ஒருவர். முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமை இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களிலும் எனது பெயரை உள்ளடக்கியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக எனக்கு தேசியப்பட்டியல் எம்.பி.பதவி வழங்கப்பட்டுள்ளது.
இப்பதவியானது ஒரு குறுகிய காலத்துக்கானது. கட்சிக்கு விசுவாசமான மற்றும் தகுதியானவர்கள் அப்பதவிக்கு இனங்காணப்படுமிடத்து எனக்கு வழங்கப்பட்டுள்ள எம்.பி. பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளேன்.
|
Sunday, 23 August 2015
![]() |
கட்சி கோரினால் பதவியை இராஜினாமா செய்யத் தயார் |
Loading...
