க
சீனாவின் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நீடித்தது. ஷாங்காய் பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தபோது பங்குகளின் விலையில் 7.5 சதவீத வீழ்ச்சி காணப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை ஷாங்காய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட 8.5 சதவீத வீழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றைய இந்த 7.5 சதவீத வீழ்ச்சி நீடித்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷாங்காய் பங்குச்சந்தையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச வீழ்ச்சியாக நேற்றைய பங்குச்சந்தை வீழ்ச்சி கணிக்கப்படுகிறது.
மற்ற பங்குச்சந்தைகளின் நிலவரம் கலவையாக காணப்பட்டது. ஜப்பானின் நிக்கெய் ஏறக்குறைய நான்கு சதவீத வீழ்ச்சியுடன் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. அங்கே கடந்த ஆறுமாதகாலத்தில் ஏற்பட்ட அதிகபட்ச வீழ்ச்சியாக இது கணிக்கப்படுகிறது.
அதே சமயம், ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு ஏறுமுகமாய் காணப்பட்டன.
நேற்று திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் உலக பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக முன்னணி நிறுவனப் பங்குகளின் மதிப்பில் சுமார் 500 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சில மதிப்பீடுகள் கணித்திருக்கின்றன.