இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை காலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று முற்றாக நீக்கியுள்ளது.
குற்ற புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றை ஆராய்ந்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஜனவரி மாதம் காலி துறைமுக கடற் பகுதியில் மிதக்கும் ஆயுத களஞ்சியமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த களஞ்சியம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து நபர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்குத் தடைவிதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, கோட்டபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல்செய்யப்பட்டது.
இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழோ, சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடைசெய்யும் சட்டத்தின் கீழோ வழக்கு தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இருந்தபோதும், சட்ட விரோதமான முறையில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, கோட்டபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து நபர்கள் வெளிநாடு செல்வதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.
