புகழ்பெற்ற நாவல் வரிசையான Fifty Shades of Grey-ஐ முதலில் பதிப்பித்த நிறுவனத்தின் பங்குதாரருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை உரிமத் தொகையாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெக்சாஸ் நகரைச் சேர்ந்த ஜெனிஃபர் பெத்ரோஸா என்ற அந்தப் பெண்மணிக்கு வழங்குவதற்காக 10.7 மில்லியன் டாலர்கள் ஒதுக்கிவைக்குமாறு, ஆஸ்திரேலியரான அமந்தா ஹேவார்டிற்கு டெக்சாஸ் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த இருவரும் இணைந்துதான் சிறிய அளவில் ஒரு பதிப்பகத்தை நடத்திவந்தனர். இந்தப் பதிப்பகத்தின் மூலம்தான் மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நாவல் முதன் முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.
பிறகு,இந்த நாவலுக்கான உரிமம் ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்திற்கு விற்கப்பட்டபோது ஜெனிஃபர் பெத்ரோஸாவுக்கு கிடைக்க வேண்டிய உரிமத் தொகை வழங்கப்படவில்லை என ஜூரிக்கள் கடந்த பிப்ரவரியில் முடிவுசெய்து அறிவித்தனர்.
இவர்களது பதிப்பகமான தி ரைட்டர்ஸ் காஃபி ஷாப் நிறுவனத்தின் சார்பில் அமந்தா ஹேவர்ட் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால், ஜெனிஃபரிடம் கையெழுத்து வாங்கும்போது, அவருக்கு வழங்க வேண்டிய உரிமத் தொகை தொடர்பான விவரங்கள் இல்லாத ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் முடிவுக்கு வந்த பிறகு, எவ்வளவு தொகையை ஜெனிஃபருக்கு வழங்க வேண்டும் என்பது முடிவுசெய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
The Fifty Shades of Grey நாவல் வரிசை ஈ.எல். ஜேம்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. இதுவரை அந்த நாவல் உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளது. இந்த நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம், உலகம் முழுவதும் 368 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
