Saturday, 12 September 2015

இன்னும் 25 வருடங்களில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்காது!:ஈரான் ஆன்மிகத் தலைவர்








இன்னும் கால் நூற்றாண்டுக்குள் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருந்ததற்கான அடையாளம் இருக்காது என ஈரானின் சுப்ரீம் தலைவரும் ஆன்மிகத் தலைவருமான அயதொல்லா அலி கமெனெய் டெஹ்ரானில் இவ்வாரம் ஆற்றிய உரையொன்றில் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை டெஹ்ரானின் இமாம் கொமெயினி பள்ளி வாசலில் இக் கருத்தைத் தெரிவித்திருந்த அயதொல்லா அலி கமெனெய் ஈரானைக் கட்டுப் படுத்தும் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவுறும் 25 வருடத்துக்குள் இஸ்ரேல் என்ற தேசமே இருக்காது என்றுள்ளார்.

அண்மையில் தான் ஈரான் தனது யுரேனிய செறிவூட்டலை நிறுத்துவதாகவும் பதிலாக மேற்குலகின் பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப் பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை P5+1 நாடுகளுடன் எட்டியிருந்தது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி சர்வதேச அணுசக்திக் கழகம் ஈரானின் அணு உலைகளைப் பார்வையிடவும் அனுமதி அளிக்கப் பட்டிருந்த நிலையில் ஈரானுடனான இந்த அணு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் தரப்பிலும் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் கடும் கண்டனம் எழுந்திருந்தது.

இதற்கு முக்கிய காரணமாக குறித்த அணு ஒப்பந்தத்தின் முக்கிய சில படிகள் 25 ஆண்டு களுக்கென மாத்திரமே என்றவாறு தீர்மானிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தான் ஈரான் ஆன்மிகத் தலைவரின் குறித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இஸ்ரேல் ஆனது இந்த 25 ஆண்டுகள் கழிந்த பின் ஈரான் மறுபடியும் அணுவல்லமை பெற்று விடும் எனக் கலங்கத் தேவையில்லை என்றும் ஏனெனில் அதற்குள் உலகளாவிய ரீதியில் ஜிஹாதிக்களின் எழுச்சி காரணமாக இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்ற தொனியில் அயதொல்லா அலி கமெனெய் தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன் அமெரிக்காவே உலகின் மிகப் பெரிய சாத்தான் என்பதை ஈரான் சுட்டிக் காட்டுவதாகவும் அதன் முக்கிய நட்பு தேசமான இஸ்ரேலை அழிப்பதே அவர்கள் நோக்கம் என்பது வெளிச்சமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஆனால் ஈரானின் கனவு பலிக்காது எனவும் இஸ்ரேல் மேலும் மேலும் உறுதியடைந்து கொண்டே செல்வதை எவராலு தடுக்க முடியாது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Loading...