இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
குறித்த கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சர்வதேச ஊடகமொன்றிக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே இருப்பதால், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் பதவி, பிரதமர் பதவி, ஆளும் கட்சியின் அமைப்பாளர் பதவி, எதிர் கட்சியின் அமைப்பாளர் பதவி ஆகிய அனைத்து பதவிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உதவியவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த 47 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களுடைய கோரிக்கை, தமிழர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிரானதல்ல எனக் கூறிய உதய கம்மன்பில அரசியல்யாப்பின் விதிமுறைகளை அமல்படுத்துமாறு கோரியே தாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் எதுவும் வைக்கப்படாத நிலையிலேயே எதிர்கட்சித் தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.
