இலங்கை ரூபாவின் மதிப்பு குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வாகனங்களின் விலைகள் உட்பட இறக்குமதி பொருட்களுக்கான விலைகள் அனைத்தும் அதிகரிக்க கூடிய நிலைமை காணக்கூடியதாகவும் மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிவற்றிலிருந்து கடனுதவிகள் மற்றும் நன்கொடைகள் எதுவும் கிடைக்காததன் காரணத்தால் ரூபாவின் மதிப்பு இறக்கத்திற்கு காரணம் என்றும் மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இலங்கை மீன்களுக்கான ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தமையும் ரூபாவின் மதிப்பு இறக்கத்திற்கு மற்றுமொரு காரணமாக இருக்கலாம் என பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அமைச்சர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டதால் அமைச்சுக்களுக்கான வளங்கள் மற்றும் நிதிகள் அதிமாக தேவைப்பட்டதன் காரணத்தினாலும் ரூபாவின் மதிப்பிறக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
ரூபாவின் மதிப்பிறக்கத்தால் யூரோ, பவுன்டஸ், அமெரிக்க டொலர் ஆகியவற்றின் பெறுமதி இலங்கையில் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும் பொருளியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் 9 றில்லியன் கடன்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவி அளிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
ரூபாவி்ன் மதிப்பு இறக்கம் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுதிட்டத்தில் துண்டுவிழும் தொகை அதிகரிக்கும் என்றும் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கான அவசியங்கள் ஏற்படும் எனவும் பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
