Wednesday, 23 September 2015

பலத்த பாதுகாப்புடன் புனித ஹஜ் யாத்திரை தாக்குதல்களை எதிர்கொள்ளவும் தயார் நிலை: சவூதி அரசாங்கம்

உலக முஸ்லிம்களின் மாநாடு என்றழைக்கப்படும் புனித ஹஜ் யாத்திரை நேற்று சவூதி அரேபியாவின் மக்கா நகரில் ஆரம்பமாகியுள்ள நிலையில் வரலாற்றில் என்று மில்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஜெனரல் மன்சூர் அல் துர்க்கி தெரிவித்துள்ளார்.

ஹஜ் யாத்திரை காலத்தைப் பயன்படுத்தி தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளகூடும் என்பதால் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதியிலுள்ள ஷீஆ பள்ளிவாசல்கள் மீது கடந்த சில மாதங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் யெமன் மீதான அரபு நாடுகளின் கூட்டுப் படை தாக்குதல்களுக்கு சவூதி தலைமை வகிக்கின்ற நிலையிலுமே அந்நாட்டுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிலையிலேயே உலகெங்கிலுமிருந்து ஒன்று திரண்டுள்ள யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சுமார் ஒரு இலட்சம் பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடு படுத்தப் பட்டுள்ளதாகவும் இவர்கள் எந்தவொரு தாக்குதல்களையும் எதிர் கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அரேய உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஜெனரல் மன்சூர் அல் துர்க்கி மேலும் தெரிவித்துள்ளார்.

இம் முறை ஹஜ் யாத்திரையின் பொருட்டு நேற்று முன்தினம் வரை 14 இலட்சம் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளனர். எனினும் இம் முறை 25 இலட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளதாக சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவிலிருந்து இம் முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 168,000 பேர் மக்காவை வந்தடைந்துள்ளனர். 80 வீதமான வெ ளிநாட்டு யாத்திரிகர்கள் அந்தந்த நாடுகளின் உத்தியோகபூர்வ ஹஜ் குழுக்கள் மூலமாகவும் 20 வீதமானோர் சுற்றுலாப் பிரயாண முகவர் அமைப்புகள் மூலமாகவும் ஹஜ் கடமைக்காக சவூதியை வந்தடைந்துள்ளனர்.

யாத்திரை காலத்தில் சவூதி அரேபியாவில் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று நகர் முழுவதும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு படையினரால் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகின்றன.

இக் காலத்தில் நோய்வாய்ப்படும் யாத்திரிகர்களுக்கு உடனடி சிகிச்சைகளை வழங்கும் பொருட்டு 25 ஆயிரம் சுகாதாரத் துறை ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு 5000 கட்டில்களும் 500 அவசர சிகிச்சைப் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நிலையான மருத்துவ வசதிகளுடன் கூடிய 8 பிரத்தியேக வைத்தியசாலைகள் ஹஜ் யாத்திரிகர்களுக்காக மாத்திரம் சேவையாற்றவுள்ளன.

மினாவில் 2.6 மில்லியன் யாத்திரிகர்கள் தங்கியிருக்கும் வகையில் தீ அனர்த்தத்திற்கு தாக்குப் பிடிக்கும் வகையிலான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்படும்பட்சத்தில் அதனை அணைப்பதற்காக 740 தீயணைப்பு இயந்திரங்களும் 100 கிலோ மீற்றர் வலையமைப்பைக் கொண்ட 800 நீர்க் குழாய்களும் தயார் நிலையிலுள்ளன.

ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியாவுக்கு வரும் யாத்திரிகர் ஒருவருக்காக சுமார் 5000 டொலர் செலவு செய்யப்படுவதாக மக்கா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மாஹிர் ஜமால் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வரும் மேர்ஸ் வைரஸ் காரணமாக குறித்த நோய் யாத்திரிகர்களை தாக்காத வகையிலான தடுப்பு நடவடிக்கைகளையும் சவூதி சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு சவூதியில் கடுமையாக பரவிய மேர்ஸ் வைரஸ் காரணமாக 532 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...