Monday, 28 September 2015

அமெரிக்காவின் பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும்: சுமந்திரன் நம்பிக்கை










ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன் வைத்துள்ள பிரேரணையை இலங்கை அரசும் ஆதரிப்பதால், பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படக்கூடும் எனவும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா புதிதாக ஒரு பிரேரணையை ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், அப்பிரேரணை எதிர்வரும் 30 ஆம் திகதி பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் அமர்வுகளின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்கா இந்தப் பிரேரணையை இரு தரப்பு இணக்கத்துடனேயே கொண்டு வந்ததாகவும், இலங்கை அரசின் சம்மதமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவும் பிரேரணைக்கு கிடைத்துள்ளதுடன், பிரேரணை தயாரிக்கப்படும்போதே இரு தரப்பினரினதும் ஆலோசனை பெறப்பட்டதாகவும் ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டவுடனேயே அதனை ஆதரிப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலில் அறிவித்ததாகவும், அடுத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமெரிக்கப்பிரேரணையை ஆதரித்து அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்காவின் பிரேரணையை எதிர்ப்பதாக முதலில் இலங்கை அரசு அறிவித்ததை அடுத்தே தான் அமெரிக்காவுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசித்ததாகவு்ம், அதேநேரத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கையிலுள்ள சில வெளிநாட்டுத்தூதுவர்களை சந்தித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே இலங்கை அரசும் இந்தப்பிரேரணையை தற்போது ஏற்பதால் ஐ.நா. மனித உரிமைப்பேரவைக்கூட்டத்தில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டமாட்டாது எனவும், இலங்கைக்கு ஆதரவான சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளும் பிரேரணைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வாய்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசின் ஆதரவின்றி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானம் செயற்படுவது கடினமே என்ற நிலையில், இந்தத் தீர்மானம் அரசின் அனுமதியுடன் நிறைவேறுவதானால் அனைத்துலக நீதியாளர்கள் முன்னிலையில் விசாரணை நடைபெறுவது உறுதியாக உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதன் மூலம் நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்


Loading...