Tuesday, 1 September 2015

புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று


news
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு, இன்று  ஆரம்பமாகவுள்ளது.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வின் முதலாவது நிகழ்வாக, சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அதனையடுத்து புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.

அதனையடுத்து, பிரதி சபாநாயகர், நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் ஆகிய தெரிவுகள் இடம்பெறும். இதன்போது தேவைப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுமென நாடாளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யூ.பி.டி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ஆரம்பிக்கப்படும்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சம்பிரதாய பூர்வமாக சமர்ப்பித்து சிறப்புரையாற்றவுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், அமைச்சரவை உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...