இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் ஓலுவில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு காரணமாக மக்கள் தமது வளங்களையும் வாழ்வாதாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.
அந்த பிரதேசத்தில் துறைமுகமொன்று அமைக்கப்பட்ட பின்னரே பெரிய அளவிலான இந்தக் கடலரிப்பு அச்சுறுத்தலை தமது பிரதேசம் எதிர்கொள்வதாக உள்ளுர் மக்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.
துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர், கடலின் இயற்கை அமைப்பு மாற்றமடைந்துள்ளதன் பிரதிபலிப்பு தான் இந்தக் கடலரிப்பு என ஓலுவில் ஜும்மா பள்ளிவாசலின் தலைவரான மௌலவி இப்ராலெப்பை முஸ்தபா.
கடல் தனது வழக்கமான எல்லையிலிருந்து 250 மீட்டருக்கும் அதிகாம உள்வாங்கி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் அங்குள்ள தென்னந்தோப்புகளையும் பெருமளவுக்கு அழித்துள்ளன என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
அந்தப் பிரதேசம் தற்போது சுனாமி அல்லது யுத்தத்தினால் அழிந்த பகுதி போல் காட்சியளிப்பதாகவும் அங்குள்ளவர்கள் பிபிசி செய்தியாளர் உதயகுமாரிடம் தெரிவித்தனர்.
கடலரிப்பினால் தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளையும் இழப்புகளையும் அமைச்சர்களான ரிஷாத் பதியுதின் மற்றும் ரவூஃப் ஹக்கீம் ஆகியோர் ஒரே நாளில் தனித்தனியாக ஏட்டிக்கு போட்டியாக சென்று பார்வையிட்டுள்ளனர் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
துறைமுக வடிவமப்பில் தவறு ஏற்பட்டதா என்பது குறித்து இப்போது ஆராயப்படுவதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள்.
இது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் பேசப்படும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
