Monday, 14 September 2015

சுகாதரப் பிரதியமைச்சர் பைசால் காசீமுக்கு அவரது சொந்த ஊரில் பெரு வரவேற்பு













திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய அமைப்பாளருமான எம்.சீ.பைசால் காசீம் சுகாதார சேவைகள் பிரதியமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் தமது சொந்த ஊரான நிந்தவூருக்கு,நேற்று முன் தினம் (12) முதற் தடவையாக வருகை தந்த போது, அவருக்குப் பொது மக்களால் பெருவரவேற்பளிக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் தலைமையிலான குழுவினர் பிரதியமைச்சரை வரவேற்று, பொன்னாடை போற்றிக் கௌரவித்தனர். அதனைத் தொடர்ந்து பிரதியமைச்சர் பொது மக்களால் மாலைகள் அணிவித்து, பட்டாசு, குரவைகள், போன்ற வாத்தியங்கள் முழங்க, திறந்த வாகனத்தின் மூலம் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மாலை மூன்று மணிக்கு பிரதேச செயலக வீதியிலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் இரவு பத்து மணிவரை நீடித்தது. வைத்தியசாலை, பிரதேச செயலகம், பிரதேச சபை, கல்விக் காரியாலயங்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், சமூக சேவை நிறுவனங்கள், மாதர் அமைப்புக்கள், விவசாயிகள், மீனவர்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக பிரதியமைச்சர் பைசால் காசீம் அவர்களினால் அவரது தந்தையின் ஞாபகர்த்தமாக உருவாக்கப்பட்ட “காசிமியா” பள்ளிவாசலில் துவாப் பிராத்தனை யொன்றும் இடம் பெற்றது.
Loading...