உலகளவில் இதுவரை இருந்துள்ளதைக் காட்டிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளே மிகவும் வெப்பம்மிக்க ஆண்டுகளாக இருக்கக்கூடும் என பிரிட்டனின் வானிலை அலுவலகம் கூறியுள்ளது.
புவியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றம் சூழலின் மீது தாக்கத்தை ஏற்டுத்தி பெரிய மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என பிரிட்டிஷ் வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.
பசுஃபிக் பகுதியில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள எல் நிஞ்யோ விளைவு உலகம் முழுவதும் வெப்பத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதாக அந்த அலுவலகம் கூறுகிறது.
உலகின் மற்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் அதேவேளையில், ஐரோப்பாவில் கோடை காலம் வழக்கத்தைவிட குளிர்ச்சியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
வெப்ப உயர்வு
கடந்த 1961 மற்றும் 1990ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புவியின் மேற்பரப்பில் இருந்த சராசரி வெப்ப அளவைவிட இந்த ஆண்டு அது 0.68 செண்டிகிரேட் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இயற்கையின் போக்கு காரணமாக உலகளவில் வெப்ப மாறுதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், மனிதர்களால் வெளியேற்றப்பட்ட புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் காரணமாகவே இந்த ஆண்டு கூடுதலாக வெப்பம் அதிகரித்துள்ளது என பிரிட்டிஷ் வானிலை மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஸ்டீஃபன் பெர்ச்சர் கூறுகிறார்.
இந்தப் போக்கு அதிகரிக்குமாயின் அடுத்த ஆண்டு வெப்பம் மேலும் கூடும் என்றும், அது தொடரவேச் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் கரியமில வாயுவின் வெளியேற்றத்துடன், பெருங்கடல்களில் ஏற்படும் மாறுதல்களின் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் பெரிய அளவில் இருக்கும் என சந்தேகிக்க வேண்டியுள்ளது என பிரிட்டிஷ் காலநிலை அவதான அலுவலகத்தின் மற்றொரு அதிகாரியான பேராசிரியர் ஆடம் ஸ்கைஃபி கூறுகிறார்.
திருப்புமுனை
புவியின் காலநிலை மாற்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மாறுதல்கள் ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பசுஃபிக் பெருங்கடல் பகுதியில் இரண்டு விதமான காலநிலை மாற்றங்கள் உருவாகி வருகின்றன என்றும் அவை குறுகிய, நீண்டகால அடிப்படையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் பசுஃபிக் பகுதியில் ஏற்பட்டுள்ள எல் நிஞ்யோ விளைவு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சராசரியாக மாற்றம் காணும் என்றும் பேராசிரியர் ஆடம் ஸ்கைஃபி கூறுகிறார்.
இதன் காரணமாக கடும் வறட்சி நிலவும் பகுதிகளில் பெருமழையும், சராசரி மழை பெய்யும் பகுதிகளில் வறட்சியும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
