இலங்கையில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப் பிராந்திய துணை பொலிஸ் மா அதிபரான யு. கே. திஸநாயக்கா என்ற இந்த அதிகாரி, கடந்த ஒரு வாரகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில், சட்டத்தரணி ஊடாக பொலிஸ் விஷேட விசாரணை பிரிவு முன்னிலையில் சரண் அடைந்த போது, கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பிரதேசத்தில் புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் மாதம் ஒரு கோடிஸ்வர வர்த்தகர் உட்பட நான்கு வர்த்தகர்களும் மூன்று பொலிஸாரும் கைது செய்யப்பட்டு ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவருக்கும் குறித்த சந்தேக நபர்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என பொலிஸ் தமையகத்திற்கு கிடைத்த தகவலைகளையடுத்து, இவர் கிழக்கு பிராந்திய துணை பொலிஸ் மா அதிபராக மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸ் தலைமையக விஷேட விசாரணைப் பிரிவு, கடந்த வாரம் இந்த துணை பொலிஸ் மா அதிபரை கைது செய்வதற்கு சட்டமா அதிபரின் அனுமதியை பெற்றிருந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார்.
தொடர்ந்தும் சில நாட்களாக தலைமறைவாகியிருந்த இவர், பொலிஸ் விஷேட விசாரணை பிரிவு முன்பாக சரண் அடைந்த போது கைது செய்யப்பட்ட பின்னர், பொலிஸாரால் முன் வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
