இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனர்களின் அலையலையான தாக்குதல் தொடரும் நிலையில், அதற்கான பதில் நடவடிக்கையாக மக்களை நிறுத்தி சோதனையிடும் பொலிசாரின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது பற்றிய திட்டம் ஒன்றை இஸ்ரேலிய அரசாங்கம் பரிசீலித்துவருகிறது.
அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளில் குறைந்தது ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கத்தியும் துப்பாக்கியும் கொண்டு தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய பொலிஸ் மற்றும் இராணுவம் கொல்லும் வலிமையுடன் திருப்பித் தாக்கியதாக இந்தச் சம்பவங்கள் அமைந்துள்ளன.
அதன் வரிசையில் ஞாயிறன்று நடந்த சம்பவத்தில், பேருந்து நிலையம் ஒன்றில் பாலஸ்தீன தாக்குதலாளி ஒருவர், இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரைக் கொன்றும் பதினொரு பேரைக் காயப்படுத்தியும் இருந்தார்.
அத்தாக்குதலாளி பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தவிர, தாக்குதலாளி என்று தவறுதலாக கருதப்பட்டதால் சுடப்பட்டும், கும்பலொன்றால் தாக்கப்பட்டும் இருந்த எரித்திரிய குடியேறி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
