Monday, 19 October 2015

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பேச்சு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை ரகளை

Image copyrightPTI
Image captionசிவசேனையின் கடும்போக்கு
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் ரகளையிலும் ஈடுபட்டனர்.
மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் அலுவலகத்திற்குள் இன்று திங்கட்கிழமை காலை நுழைந்த சிவசேனா கட்சியின் தொண்டர்கள், கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய தலைவரான சஷாங் மனோகர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியார் கான் ஆகியோருக்கு இடையேயான பேச்சு வார்த்தை மும்பையில் நடைபெறும் என்கிற செய்தி வெளியானது.
இந்த நிலையை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை, டில்லியில் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகர் குலாம் அலியின் இசை கச்சேரி மும்பை மற்றும் புனேவில் நடைபெறவிருந்தது. இதற்கும் சிவசேனா கட்சியினர் தெரிவித்த எதிர்ப்பு அச்சத்தை உண்டாக்கியதால், அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன
சிவசேனா கட்சியினரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பாடகர் குலாம் அலிக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தார். மேலும் டில்லியில் அவரது இசை நிகழ்ச்சியை நடத்த வருமாறு குலாம் அலிக்கு அதிகாரபூர்வ அழைப்பும் விடுத்தார். இந்த அழைப்பை குலாம் அலி ஏற்றுக்கொண்டார் என்றும், வரும் நவம்பர் 8 ஆம் தேதியன்று அவரது இசை நிகழ்ச்சி டில்லியில் நடைபெறும் என்றும் டில்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதைப்போல் சென்ற வாரம் அக்டோபர் 12 ஆம் தேதியன்று மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹ்முத் கசுரியின் புத்தக வெளியிட்டு விழா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா கட்சியினர், அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான சுதீந்திர குல்கர்னி மீது தாக்குதல் நடத்தினர். சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள், புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியை அவர் நிறுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். அதையும் மீறி திட்டமிடப்பட்ட புத்தக வெளியிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Loading...