கிளி. சர்வதேச மைதான நிர்மாணிப்பு பணி நிறைவு
கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று மாவட்ட அரச அதிபர் சு.அருமை நாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, வடமாகணத்தில் தற்போதுள்ள விளையாட்டு மைதானங்கள் அனைத்திலும் விட பல மடங்கு வசதிகளை உடையதாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் சர்வதேச விளையாட்டு மைதானம் வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதை யடுத்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட நாள் முயற்சியின் பயனாகத் தற்போது முதலாவது சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் நீச்சல் தடாகம், பயிற்சி மைதானம், துடுப்பாட்ட மைதானம் என்பனவற்றுடன் விளையாட்டுப் பொருள் விற்பனை மையம் ஒன்றும் அமைந்துள்ளது.
இவை அனைத்தினது புனரமைப்புப் பணிகளும் முடிவடைந்து விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக உத்திகயோக பூர்வமாகத் திறப்புவிழா இடம்பெறவுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் இளையோரின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்படுகின்ற பட்சத்தில் இந்த மாவட்ட இளைஞர்களும் பயிற்சிகளைப் பெற்றுத் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இடங்களைப் பெறமுடியும் என எதிர் பார்க்கப்படுகின்றது. புனரமைப்புப் பணிகள் முடிவுற்றுள்ள மைதானத்தை நேரில் பார்வையிட்டுள்ளேன். விரைவில் இந்த மைதானம் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்படும் என்றார்.
