மாணவர்கள் அறிவில் பூரணத்துவம் அடையவேண்டும்:மைத்திரி
கடந்த கால அனுபவங்களுடன் நவீன தொழிநுட்ப யுகத்தை வெற்றி கொள்வதற்காக, மாணவர்கள் அறிவில் பூரணத்துவம் அடையவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கொழும்பு ஆனந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது-
‘எமது வரலாற்று திறமைகளை நாம் பல சந்தர்ப்பங்களில் நினைவுகூருகின்றோம். ஆனால், கடந்த காலத்தின் சிறப்பினையும் உன்னத கலாசாரம் குறித்தும் நாம் பெருமிதம் அடைவதை விடுத்து, கடந்த காலத்தை விட ஒளி மயமான எதிர்காலமொன்றை சிறுவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நாம் உறுதிகொள்ள வேண்டும். அதுவே எமக்கு கௌரவமாகும்.
எமது நாட்டிற்கு உன்னதமான வரலாறு உள்ளது. அந்த வரலாற்று அனுபவங்கள் மற்றும் அறிவோடு புதிய தொழிநுட்ப யுகத்தை புதிய தலைமுறையோடு போட்டிமிக்க சமூகத்தில் நாம் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்’ என தெரிவித்தார்.